மரண தண்டனை விவகாரம் – மைத்திரியின் கருத்திற்கு ஐ.நா. மறைமுகத் தாக்கு!

போதைப்பொருள் விநியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் மறைமுகமாக தாக்கியுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இலங்கை மரண தண்டனையை நிறைவேற்றும் நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதாக, பல மனித உரிமை அமைப்புக்கள், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு பல மனுக்களை கையளித்துள்ளன.

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 40ஆவது அமர்வு ஜெனீவாவில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்டோனியோ குட்ரெஸ்,

“மனித உரிமையை நிலைநாட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளபோதும், அதனை பாதுகாக்கவும் சமூக நீதிக்காகவும் வலிமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, குடியேற்றவாசிகள் தமது உரிமை தொடர்பில் இன்று உரக்கப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளமை, ஊடகவியலாளர்கள் அச்சமின்றி பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளமை மற்றும் பெருமளவான நாடுகள் மரண தண்டனையை அமுல்படுத்தாமல் உள்ளமை என்பன சிறந்த விடயங்கள்” என தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவிற்கு, மறைமுகமாக அன்டோனியோ குட்ரெஸ்ஸின் இந்த கருத்து அமைந்துள்ளது.

நீதிமன்றங்களினால் குற்றம் இழைத்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டாலும், அதனை நிறைவேற்றும் ஆவணங்களில் எந்தவொரு ஜனாதிபதியும் 1976 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் கையெழுத்திடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்