யேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி 2019

யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழத்தின் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து அம் மாணவர்களுக்குள் இருக்கும் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக மூன்றாவது முறையாக நடைபெற்ற கலைத்திறன் போட்டி 2019 மிகச் சிறப்பாக யேர்மனியில் உள்ள கற்றிங்கன் நகரத்தில் 9.3.2019 சனிக்கிழமை நடைபெற்றது.

யேர்மனியில் உள்ள ஐந்து மாநிலங்களில் தெரிவுப்போட்டிகள் நடைபெற்று அதில் முதலாமிடத்தைப் பெற்ற மாணவர்கள் இறுதிப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர். போட்டிகள் பல வகையாகப் பிரிக்கப்பட்டு நிகழ்ந்தன.சங்கீதம், தாயகப்பாடல், தமிழிசை, கும்மி நடனம், காவடி, கரகம், பரதநாட்டியம், தாயகப்பாடலுக்கான எழுச்சி நடனங்கள், நாட்டுக்கூத்து, நாடகம், ஆகியவற்றில் போட்டியிட்ட மாணவர்கள் சபையோரை ஆச்சரியத்துக்குள் கொண்டு சென்றனர்.
இவற்றில் சிறப்பாக காவடி, கரகம், நாட்டுக்கூத்து, நாடகம் என்பன எங்கள் குழந்தைகளில் ஆற்பரித்து நிற்கும் கலையார்வத்தை அடையாளப்படுத்தி நின்றன.நாடகம்,நாட்டுக்கூத்தில் நடித்த பிள்ளைகளின் தமிழ்! பார்வையாளர்களுக்கு கம்பீரத்தைக் கொடுத்தது. நாடகங்கள் ஓவ்வொன்றையும் கண்ணீருடன் பார்வையிட்ட சபையோரைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. தாயகத்து அழிவுகளை கண்முன் கொண்டுவந்து காட்டிய எம் பிள்ளைகளின் தமிழையும் நடிப்பையும் அங்கு வந்திருந்த எவராலும் மறக்கமுடியாத விடயமாக அமைந்தது.

இவர்களுக்கு மதிப்பளித்த ஓர் ஆசிரியை நாம் இப்போது புலத்தில் இருக்கின்றோமா? அல்லது புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கின்றோமா? என்று புரியவில்லை. எம்மாணவர்கள் எம்மை எம்தாய் நாட்டின் அவலக் காட்சிகளின் நடுவே இருத்திவிட்டார்கள். இதைப் பார்வையிடும் பிள்ளைகள் எம் இனத்திற்கு என்ன நடந்தது என்ற தேடுதலைச் செய்யப் போகின்றார்கள் என்றார்.
இராவண காவியத்தை நாடகமாகக் கொண்டுவந்த மாணவர்கள் இராவணன் என்ற தமிழனின் வீரத்தையும்,பக்தியையும்,அரசாண்ட நேர்மையையும், கம்பன் என்ற தமிழ்ப் புத்தியீவியின் கபடத்தையும் எடுத்துக் காட்டினார்கள்.
நடன ஆசிரியர்களின் நெறிப்படுத்தல் இல்லாத மாணவர்களின் விடுதலை நடனங்கள் வியப்பை ஊட்டியது, விடுதலைப்பாடலின் வீரவரிகளுக்கு அவர்கள் காட்டிய பாவனைகள் போராடும் குணத்தை விதைத்தது. இந்த மண்ணில் பிறந்த எங்கள் பிள்ளைகளின் வீரமிகு தாயகப்பற்று பார்வையாளர்களை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

நடன ஆசிரியர்களின் நெறிப்படுத்தலில் உருவான விடுதலை நடனங்கள் பரத நாட்டியத்தை மிஞ்சி நின்றது. வீரத்தையும், சோகத்தையும், பரதக்கலையின் பாவனையில் காட்டிய எம் குழந்தைகளைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. மொத்தத்தில் இந்தப் போட்டி நிகழ்வு அந்த ஆசிரியை சொன்னது போல்; நாம் புலத்தில் இருக்கின்றோமா? அல்லது புலம்பெயர்ந்து இருக்கின்றோமா? என்ற கேள்வியைத்தான் உருவாக்கியது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்