45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. நேற்று மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஐதேமு உறுப்பினர்களுடன் இணைந்து, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கூட்டு எதிரணி மற்றும் ஜேவிபி உறுப்பினர்களுடன் இணைந்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும், வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

வரவுசெலவுத் திட்ட விவாதம் முடிவடைந்ததும், வாக்கெடுப்பு நடத்துமாறு தினேஸ் குணவர்த்தன கோரினார். இதையடுத்து இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில், வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் மூலம், 45 மேலதிக வாக்குகளால் வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது.

இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 13 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார்.

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செயற்படும் சிவசக்தி ஆனந்தனும், கூட்டமைப்பில் இணைந்து செயற்படும் செல்வம் அடைக்கலநாதனும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சிறிலங்கா சுந்திரக் கட்சியைச் சேர்ந்த மகிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, துமிந்த திசநாயக்க உள்ளிட்ட மைத்திரிபால சிறிசேன அணியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக இயங்கும் அதுரலியே ரத்தன தேரரும், விஜேதாச ராஜபக்சவும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

நேற்றைய வாக்கெடுப்பில் மொத்தம் 31 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

எனினும், எஸ்.பி.திசநாயக்க, டிலான் பெரேரா உள்ளிட்ட சில சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

இதொகாவைச் சேர்ந்த முத்து சிவலிங்கம் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். எனினும் அந்தக் கட்சியின் தலைவரான ஆறுமுகன் தொண்டமான் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் கிடைத்திருந்தன. எனினும் இறுதி வாக்கெடுப்பில் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக 74 வாக்குகளே கிடைத்தன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்