அதிபர் தேர்தலை பிற்போடும் முயற்சிக்கு எதிராக பீரிஸ் போர்க்கொடி

அதிபர் தேர்தல் நடத்துவதை பிற்போடுகின்ற எந்த முயற்சிகளையும் அனுமதிக்க முடியாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“ சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் அவரது பெயரையும், நிறைவேற்று அதிகார அமைப்பையும் கெடுக்கின்றனர்.

சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று, உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பது குறித்து ஆராயப்படுவதாக சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர கூறியிருக்கிறார்.

அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி அல்லது அவருக்குத் தெரியாமல் சிலர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

19 ஆவது திருத்தச்சட்டம், அதிபரின் பதவிக்காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைத்திருக்கிறது.

19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஜூன் 21ஆம் நாளே சபாநாயகரின் ஒப்புதலைப் பெற்றது என்பதால், அன்றில் இருந்தே அதிபரின் பதவிக்காலம் தொடங்குகிறது என்பதே தயாசிறி ஜயசேகரவின் வாதம்.

ஆனால் இது அர்த்தமற்ற வாதம். அதிபராகப் பதவியேற்ற நாளில் இருந்தே, பதவிக்காலம் தொடங்குகிறது.

புதிய தலைமை நீதியரசர் பதவியேற்ற பின்னர் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்கவுள்ளதாக தயாசிறி ஜயசேகர கூறியிருக்கிறார்.

இது வலுவான வழக்காக இருந்தால், அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்?

அரசியலமைப்பின் 129 (03) பிரிவின் கீழ், இதுபோன்ற வழக்குகளை குறைந்தது 5 நீதியரசர்களைக் கொண்ட அமர்வே விசாரிக்க வேண்டும். தலைமை நீதியரசரால் தனித்து எதுவும் செய்து விட முடியாது.

இந்த முயற்சிகள் தற்போதைய தேர்தல் நடைமுறைகளை குழப்புகின்ற முயற்சியாகும்.

அதிபர் தேர்தலைப் பிற்போடுவதற்கு முற்பட்டால் அதற்கு எதிராக பொதுஜன பெரமுன நீதிமன்றத்துக்குச் செல்லும்” என்றும் அவர் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்