36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேரைக் காணவில்லை

சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து, கொல்லப்பட்ட 11 வெளிநாட்டவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியர்கள் மூவர், போர்த்துக்கல் நாட்டவர் ஒருவர், துருக்கியர்கள் இருவர், பிரித்தானியர்கள் மூவர், பிரித்தானிய

மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்படாமல் 25 சடலங்கள்

கொல்லப்பட்ட 25 வெளிநாட்டவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் கொழும்பு சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 9 வெளிநாட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 19 வெளிநாட்டவர்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பில் மட்டுமே சிக்கினர்

கொழும்புக்கு வெளியே குண்டுகள் வெடித்த நீர்கொழும்பு, மட்டக்களப்பு மருத்துவமனைகளிலோ, கொழும்பு வடக்கு மருத்துவமனையிலோ வெளிநாட்டவர்களின் சடலங்களோ, காயமுற்றவர்களோ அனுமதிக்கப்படவில்லை என்று அந்தந்த மருத்துவமனைகளின் பணிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்கவும், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலர் ஹெற்றியாராச்சியும் நேற்றுமாலை கொழும்பு மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களைப் பார்வையிட்டதுடன், சவச்சாலையில் நின்ற வெளிநாட்டவர்களுக்கும் இரங்கல் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தகவல்களை தெரிவிக்க கொழும்பில் உள்ள தூதரகங்களின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏனைய சடலங்களை அடையாளம் காணும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் +94 112323015 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு விபரங்களை அறியலாம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குடும்பங்களாக படுகொலை

கொழும்பில் நேற்று ஆடம்பர விடுதிகளில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்களில் பல வெளிநாட்டவர்கள் குடும்பங்களாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுமுறையைக் கழிக்க வந்த பல வெளிநாட்டவர்கள் இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கியுள்ளனர்.

ஆடம்பர விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் நேற்றுக்காலை 8.45 மணியளவில், உணவருந்த சென்றிருந்த போதே, அவர்களை இலக்கு வைத்து குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய குடும்பத்துக்கு நேர்ந்த கதி

ஷங்ரி-லா விடுதியின் இரண்டாவது மாடியில் உள்ள உணவகத்தில், நடந்த குண்டுவெடிப்பில் பிரித்தானிய குடும்பம் ஒன்றும் சிக்கியுள்ளது.

இதில், 11 வயதுடைய அலெக்ஸ் நிக்கல்சன் என்ற சிறுவனும், அனிதா என்ற 42 வயதுடைய தாயாரும் இறந்தனர்.

தந்தை பென் நிக்கல்சன் காயமின்றித் தப்பிய போதும் அவர்களின் பெண் குழந்தை காணாமல் போயுள்ளார்.

அமெரிக்கர்கள் பலர் பலி

சிறிலங்காவில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களில் அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனினும் எத்தனை அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர் என்ற விபரங்களை அவர் வெளியிடவில்லை.

அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவ அமெரிக்க .இராஜாங்கத் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்ரேலியர் ஒருவர் காயம்

அவுஸ்ரேலியர்கள் எவரும் நேற்றைய குண்டுத் தாக்குதல்களில் உயிரிழக்கவில்லை என்று அவுஸ்ரேலிய அமைச்சர், சைமன் பேர்மிங்ஹாம் தெரிவித்துள்ளார்.

எனினும், அவுஸ்ரேலியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும், அவர் கூறியுள்ளார்.

பல நாடுகள் பயண எச்சரிக்கை

சிறிலங்காவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து பல நாடுகள், தமது குடிமக்களை சிறிலங்காவுக்கு செல்வது குறித்து அவதானமாக இருக்குமாறு பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ள அதேவேளை, சிறிலங்காவில் உள்ள தமது குடிமக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், உதவிகள் தேவைப்பட்டால் தூதரகங்களை அழைக்குமாறும் கோரியுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்