யேர்மன் வாழ் எம் தாய்த்தமிழ் உறவுகளே!

முள்ளிவாய்க்கால் பெருவலி தாங்கிய, தமிழின அழிப்பின் உச்ச நாள் மே18இன் 10 ம் ஆண்டு நினைவுப் பேரணியோடும், வணக்க நிகழ்வோடும் உணர்வுபூர்வமாக இணைந்து கொள்ள தயாராகுவோம். நாடு தழுவிய வகையில் எமது உறவுகள் வருகை தர வாய்ப்பாக ஒழுக்கமைக்கப்பட்டுள்ள பேரூந்துகளிலும், சிற்றூர்திகளிலும் மற்றும் தனிப்பட்ட முறையிலுமாக குறித்த நேரத்தில் பங்கு கொள்வோம்.

ஒவ்வொரு குடும்பங்களில் இருந்தும் தவறாது பங்கு கொள்வதோடு, எம்மால் இயன்ற அளவு எமது வாழ்விட மொழி நண்பர்களை, அயலவர்களை, சமூகப் பிரதிநிதிகளை அழைத்து வருவோம். எங்கள் வலிகளை உணர்த்துவோம். எமது நாளாந்தக் கடமைகளையும், பிரத்தியேக கடமைகளையும் கடந்து மே 18 ல் எமது இனம் சந்தித்த பெரும் துயரையும், துயர் தந்த ஸ்ரீலங்கா மற்றும் உலக நாடுகளின் கூட்டிணைவுச் சதியையும் மீண்டும் அம்பலப்படுத்துவோம்.

மே18 இன் துயர நாளிலே எமது ஆடம்பர, களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்து எங்கள் மனங்களில் உலக நீதி பெறுதலுக்காக உறுதியெடுப்போம். திரையரங்குகள், மண்டபங்கள் மற்றும் தனியார் வாழ்விடங்களில் நிகழும் ஏனைய காட்சிப்படுத்தல்கள், நிகழ்வுகளை தவிர்த்து, எமது இனத்தின் வலிசுமந்த தருணங்களை, அவலங்களை நினைவு கூருவோம். சமூக வலைத்தளங்களில் பொறுப்புடனும், நிதானத்துடனும், உரிமையுடனும் மே 18 தொடர்பான காட்சிப்படுத்தல்களையும், அதற்கான நீதி கோரும் எழுச்சிமிக்க பணிகளையும் மட்டுமே தரவேற்றுவோம்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்தேறிய எல்லாவகையான பெருந்துயரிலும், உணவுக்காக ஏங்கிய கணங்களை அடையாளமிடும் வகையில் மே 18 கஞ்சியை ஒரு நேர உணவாக கடைப்பிடிப்போம். சமகால தாயக நெருக்கடி நிலைகளை வாய்ப்பான, பொருத்தமுடைய பிறமொழி அமைப்புகளுக்கு எடுத்துரைப்போம்.

அன்பான எமது மக்களே!
புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மீது இன்னும் அசையாத நம்பிக்கை கொண்டு, எங்கள் தாயக மண்ணில் நித்திய உறக்கம் கொள்ளும் மாவீரர்களினதும், வாழ்ந்து வரும் உறவுகளினதும் நம்பிக்கை வீண் போகாமல், அதற்குப் பாத்திரமாக நாங்கள் எங்கள் உரிமையில் சோரம் போகாமல் விழிப்போடும், உணர்வோடும், உரிமை முழக்கங்களோடும், தொடர் நீதிகோரும் திடத்தோடும் வாழ்கின்றோம் என்பதை மீண்டும் மே18ல் நிரூபிக்க எழுச்சிமிக்க பேரணியாக திரள்வோம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்