கூட்டணியும்-முன்னணியும் ஒன்றிணைவது சாத்தியமற்றதா?

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் கூட்டணியும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் பலத்த எதிர்பார்ப்பாக இருக்கின்றது..

‘கூரையேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானமேறி வைகுண்டம் போவேன் என்று சொன்னதுபோல்’, தமிழ் மக்களுக்கு இந்த ஆண்டு தீர்வு வருகின்றது, அடுத்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு வந்தே தீரும்புதிய அரசியல் சீர்திருத்தம் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்று அடித்துக்கூறி,கடந்த பத்து வருடங்களாக தமிழ் மக்களை ஏமாற்றியே காலம் கழித்து,தங்கள் சொத்துக்களைப் பெருக்கிக்கொண்டனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்துச் சிந்திக்காது, சிறீலங்காவில் ஆட்சியில் யார் அமர்ந்திருந்தால் தங்களுக்கு (தமிழ் இனத்திற்கல்ல) சாதகம் என்பதைத் தீர்மானிப்பதிலேயே இவர்களின் காலம் செல்கின்றது.

கடந்த பத்து வருடங்களில் தமிழ் மக்களுக்காக ஒரு சிறு துரும்பைக்கூட இவர்களால் நகர்த்த முடியவில்லை.

இரண்டு வருடங்களைக் கடந்தும் இன்னும் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கக்கூட இவர்களால் முடியவில்லை.

நிலங்கள் தொடர்ச்சியாகப் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. தமிழர் தாயகம் வெளிப்படையாகப் பெளத்த மயமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவற்றை தடுத்து நிறுத்தவேண்டிய,தட்டிக்கேட்கவேண்டிய பொறுப்புள்ள கூட்டமைப்பு, ஆக்கிரமிப்பில் ஈடுபடும் சிங்களப் பெரினவாதத் தலைமைகளுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள நாடளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நேரங்களிலும் தாமாகவே ஒவ்வொன்றைக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறும் இவர்கள், தமிழ் மக்கள் சிலரால் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை எனக்கூறி சிறீலங்காவின் உயர் பாதுகாப்புக்களையும் பெற்றுள்ளனர். தமிழ் மக்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறும் இவர்களை நையப்புடைப்பதற்கு தமிழ் மக்கள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள் என்பதை கடந்த வாரம் கல்முனைப் போராட்டத்திற்கு இவர்கள் சென்றபோது உறுதிப்படுத்துகின்றன.

சுமந்திரனை தமிழ் மக்களின் நையப்புடைப்பில் இருந்து சிறீலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கான சாபக்கேடாக மாற்றப்பட்டுவிட்டதென்பது கண்கூடாகத் தெரிகின்றது.

இந்தவேளையில்,தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பது குறித்து நியாயபூர்வமாகச் சிந்திக்கும் சக்திகளான தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும்,தமிழ் மக்கள் கூட்டணியும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் பலத்த எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இந்த இரு அணிகளும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பாக கடந்த அமரர் தர்மராஜா நினைவு நிகழ்வு அமைந்திருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்களுடன் இணைந்து செயற்பட்டால் தம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்று சி.வி.விக்னேஸ்வரன் அந்நிகழ்வில் உரையாற்றும்போது வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 30 வருடகால யுத்தத்தில் இழந்தவற்றை விடவும் வடக்கு, கிழக்கில் எமது இருப்புக்கான அடிப்படைகளை வேகமாக நாங்கள் இன்று இழந்து கொண்டிருக்கின்றோம்.

எமது அரசியல்,சமூக,பொருளாதாரஅபிலாசைகளுக்கான அடித்தளங்கள் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டு வருகின்றன.

நிலம் போனால் எமது அடிப்படை நிலையே போய் விடும் என தனது நண்பர் தர்மராஜா குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, பலமுள்ள கொள்கைப்பற்றுள்ள தமிழ்த் தலைவர்கள் ஒன்றுசேர வேண்டியதன் அவசியத்தை விக்னேஸ்வரன் அங்கு வலியுறுத்தியிருந்தார்.

அதேவேளை அதே கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொள்கை வழிக்கூட்டே முக்கியம் என கூறியிருக்கின்றார். தமிழ் மக்களிற்கான மாற்று அணிக்கான கூட்டு என்பது கொள்கை அடிப்படையிலான கூட்டாக அமையவேண்டுமே தவிர வெறுமனே தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கான கூட்டாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு நிகழாதுவிடின் தந்தை செல்வா சொன்னதற்கும் அப்பால், தமிழினத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது போய்விடும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

தமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் மிகப்பெரிய கருத்து வேறுபாடு இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை வலியுறுத்தித்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஆனால், இந்தியாவின் கடுமையான அழுத்தங்களால் தமிழ்த் தேசியம் என்பதை வலியுறுத்த முடியாத இடத்தில் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி இருப்பதாக வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

இந்தத்‘தமிழ்த் தேசியம்’என்ற சொல் இருப்பதனாலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விக்னேஸ்வரன் தங்களுடன் சேர்த்துக் கொள்ளக்கூடாது என இந்தியா அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனாலும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து இவ்விரு அணிகளும் ஒன்றிணைந்து பயணித்தாலே பலமான ஒரு சக்தியாக எழமுடியும் என்பது இன்றைய கள நிலவரம்.

தமிழ் மக்கள் கூட்டணியும்-தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒன்று சேர்வது சாத்தியமா? என்பதல்ல இன்றுள்ள கேள்வி. தமிழர் தாயகம் வேகமாகப் பறிபோய், 3வது நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டுக்
கொண்டிருக்கும் ஆபத்தான கட்டத்தில், தமிழ் இனத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏதோவொரு புள்ளியில் இவ்விரு கட்சிகளும் இணைந்து பயணிப்பதே வரலாற்றின் தேவையாக இருக்கின்றது.

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு

About இலக்கியன்

மறுமொழி இடவும்