அமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர

அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து, வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“அமெரிக்க – சிறிலங்கா இராணுவ உறவுகளுக்கு எதிராக பரப்புரை செய்பவர்களில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற அரசியல்வாதிகளும் உள்ளனர்.

அமெரிக்காவுடன் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு, சோபா உடன்பாடு, மிலேனியம் சவால் உடன்பாடு ஆகியவற்றில் கைச்சாத்திடக் கூடாது என விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் அமெரிக்க எதிர்ப்பு பரப்புரை ஒன்றை மேற்கொள்கின்றனர்.

அத்தகைய ஒப்பந்தங்களை எதிர்ப்பவர்கள் அமெரிக்காவுடனான இருதரப்பு உறவைக் குறைத்து மதிப்பிட்டுள்ளனர். அமெரிக்கா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக இருந்தது.

அமெரிக்காவுடன் உடன்பாடுகளில் கையெழுத்திடுவதற்கு எதிர்க்கட்சிகள் வெளியிட்டு வரும் எதிர்ப்புகள், அமெரிக்காவுடனான உறவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

சிறிலங்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி பங்காளியான அமெரிக்கா இருக்கிறது. ஆண்டுக்கு 3.7 பில்லியன் டொலர் பொருட்கள் சேவைகளை சிறிலங்காவில் இருந்து கொள்வனவு செய்கிறது, அமெரிக்கா.

போர்க்காலத்தில், பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச கையெழுத்திட்ட, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டை, (2017 இல் காலாவதியானது), தற்போதைய உடன்பாட்டுடன் ஒப்பிட்டு, புதிய உடன்பாட்டில் நுழைந்ததால், நாட்டுக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இரண்டுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. சிறிலங்கா முதன்முதலில் 1995 ஆம் ஆண்டிலேயே, சோபா உடன்பாட்டுக்குள் நுழைந்தது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்