தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது

யார் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்கப் போவதில்லை. எனவே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ் மாவட்ட சங்கத் தலைவி சுகந்தினி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்தே போராடி வந்தோம். நாம் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. இந்நிலையில் ஏனைய பகுதிகளிலுள்ள 8 தலைவிகளும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக அதிகாரிகளைச் சந்திக்க கொழும்பிற்கு சென்றார்கள் அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில்தான் யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திருட்டு தனமாக திறக்கப்பட்டது. இதனால் இவர்கள் மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன் இந்த அலுவலகத்தை நாம் அனைவரும் எதிர்க்கின்றோம். மேலும் இந்த அரசாங்கத்தின் மீது எமக்கு நம்பிக்கை இல்லாததன் காரணமாகவே சர்வதேச விசாரணையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

எமக்கு இந்த அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்பட இருக்கின்ற 6 ஆயிரம் ரூபாயை ஏற்கமாட்டோம். உலகில் 43 நாடுகளில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அவர்களின் உறவுகளைத் தேடி கொடுக்கும் வரை வாழ்வாதார உதவியாக வழங்கப்படுகின்ற நிதியை ஏற்கமாட்டோம்.

இலங்கை அரசு எமக்கு வழங்குவதாக கூறுகின்ற 6000 ஆயிரம் ரூபாய், மீன் வாங்குவதற்கு கூட போதாது. எனவே ஐக்கிய நாடுகள் சபை எமது விடயத்தில் தலையிட்டால் அதற்காக முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கின்றோம்.

இந்த பேரினவாத அரசினால் 30ஆயிரத்துக்கு மேற்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பங்களிப்பும் தற்போது கிடைக்கப்பெற்று வருகின்றது. அதற்கான கூட்டம் கிளிநொச்சியில் அடுத்து நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏனைய பகுதிகளிலும் நடைபெறவுள்ளன.

மேலும் சரியான நிர்வாக கட்டமைப்பிற்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அனைவரையும் கொண்டு வந்து, அதனூடாக புதிய வழிமுறைகளை நோக்கி பயணிக்க தீர்மானித்துள்ளோம்.

இதேவேளை நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸ, கோட்டாபய என யார் வந்தாலும் எமக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. எனவே தமிழ் மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது – என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்