சஜித் தோல்வியடைந்தால் தமிழீழத் தனிநாடு கோருவதற்கு வாய்ப்பு ஏற்படும் – உண்மையைப் போட்டுடைத்த இரா.சம்பந்தன்!

வரும் 16.11.2019 சனிக்கிழமை நடைபெறும் சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோற்கடிக்கப்பட்டால் தமிழர்கள் தனிநாடு கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமிருப்பதாக இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

நேற்று 13.11.2019 புதன்கிழமை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திய பொதுக் கூட்டத்திலேயே இவ் இன்ப அதிர்ச்சி அறிவித்தலை இரா.சம்பந்தன் வெளியிட்டதாக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனின் காலைக்கதிர் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்:

‘‘வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருக்கின்ற வகையில் எங்களுக்கு ஓர் ஆட்சிமுறை தேவை என்ற கருத்தை வலியுறுத்தி, அதை ஏற்படுத்த வேண்டுமென்ற அடிப்படையில் நாங்கள் வாக்களிக்கப் போகின்றோம்.

அதன் மூலமாக உள்ளக சுயநிர்ணய உரிமையை பெறக் கூடிய நிலைமையை நாங்கள் உருவாக்குகின்றோம். அதியுச்ச அதிகாரப் பகிர்வு ஏற்பட்டால் அந்தப் பிரதேசத்து மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பார்கள்.

ஆனால் தொடர்ச்சியாக உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்படுமாக இருந்தால், அந்த மறுப்பின் காரணமாக, வெளிப்புறச் சுயநிர்ணய உரிமை சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் உருவாகுவதற்கு இடமுண்டு.’

வெளிப்புறச் சுயநிர்ணய உரிமை அல்லது வெளியக சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதைக் குறிக்கும் பதமாகும்.

இந் நிலையில் சஜித் பிரேமதாசா தோல்வியடைந்தால் தமிழர்கள் தனிநாடு கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமுண்டு என்று இரா.சம்பந்தன் தெரிவித்திருப்பதன் மூலம், சஜித் பிரேமதாசாவைத் தோல்வியடைய வைக்குமாறு பூடகமான முறையில் அவர் கோரியுள்ளார் என்று அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தனது 2002 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் உரையில் உள்ளக, வெளியக சுயநிர்ணய உரிமைகள் பற்றிக் குறிப்பிடும் பொழுது பின்வருமாறு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் கூறினார்:

‘‘தமிழ் மக்கள், தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகிறார்கள்.

தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகிறார்கள். தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகிறார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாசை.

உள்ளான சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில் தான் அடங்கியிருக்கிறது. சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத்திட்டத்தை சாதகமாகப் பரிசீலனை செய்வோம்.

ஆனால், அதேவேளை எமது மக்களுக்கு உரித்தான உள்ளக சுயநிர்ணயம் மறுக்கப்பட்டுப் பிரதேச சுயாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால், நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.’’

சரியாகப் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் தனது மாவீரர் நாள் உரையில் தமிழர்களின் தன்னாட்சி உரிமை பற்றித் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்ட முக்கிய கருத்தைத் தழுவி, ஏறத்தாழ அதே பாணியில் இரா.சம்பந்தனின் அறிவித்தல் அமைந்துள்ளமை அரசியல் அவதானிகளின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்