துட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்…!

ருவான் வெலிசாய…! ஒட்டுமொத்த இலங்கையின் – இலங்கையரின் கவனத்தையும் நேற்று முன்தினம் தன்பக்கம் ஈர்த்துக் கொண்ட இடம். ஆம்…! இங்குதான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம்மிக்க ஏழாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்த இடம்.

ஜனாதிபதியாகப் பதவியேற்பவர் தனக்குப் பிடித்தமான இடத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்ச ருவான் வெலிசாயவில் பதவி ஏற்றுக்கொண்டதற்குப் பின்னால், ஓர் ஆழமான வரலாற்றுக் காரணம் உள்ளது. இதை அவருடைய முதல் பேச்சும் ஆழமாக உணர்த்திச் சென்றுள்ளது.

அவரின் இந்த வியாக்கியானங்களை நாம் விளங்கிக் கொள்ள – கோட்டாபய சொல்லும் வரலாற்றுச் செய்தியை உணர நாம் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்.

நம் கண்முன்,
ஒரு சிறுவன் பஞ்சணையில் படுத்திருக்கிறான். ராஜ களை ததும்பும் அவன் முகம் சோகத்திலும் கோபத்திலும் சிவந்து கிடக்கிறது. கைகளையும் கால்களையும் குறுக்கிக் கிடக்கிறான். அவனின் தாய் அவனைத் தேற்றிக் கொண்டே கேட்கிறாள்.

“காமினி ஏன் இவ்வாறு கஷ்டப்பட்டுப் படுத்திருக்கிறாய்…! கை, கால்களை நீட்டித் தாராளமாகப் படுத்துக் கொள்”, என்கிறாள் தாய்.

கோபத்தில் எள்ளும்கொள்ளுமாய் வெடித்த மகன் சொல்கிறான், “மகா கங்கைக்கு அப்பால் (வடக்கே) தமிழர்கள். கீழே (தெற்கே) சமுத்திரம். கை, கால்களை நீட்டி தாராளமாக நான் படுப்பது எங்ஙனம்…?”

இவ்வாறு கேட்பவனுக்கு என்ன பதில் சொல்வது? தேற்றுவதுதான் எப்படி? ஏனெனில் அவனுள் இந்தக் குரோதமும் விரோதமும் வளரக் காரணமானவள் அவளல்லவா…? தன் மசக்கை ஆசைகளில் ஒன்றாக “தமிழ் (எல்லாளனின்) தளபதி ஒருவனின் தலையை வெட்டிய – குருதி படிந்த வாளைக் கழுவி, அந்த இரத்த நீரை குடிக்கக் கேட்டவள் அல்லவா அவள்…? அவளுக்குப் பிறந்தவளின் – அவள் அதைக் குடிக்கும்போது கருவில் இருந்த பிள்ளைக்கு தமிழனை விரோதிக்கவும் – பகைக்கவும் சொல்லித்தான் கொடுக்க வேண்டுமா… என்ன?

நீங்கள் நினைப்பது சரிதான்… அந்தச் சிறுவன் வேறு யாருமல்லன். மகாவம்சம் கூறும் இலங்கை வரலாற்றின கதாநாயகன் – சிங்கள – பௌத்தர்கள் இன்றும் – என்றும் போற்றிப் புகழும் வீரநாயகன் துட்ட கைமுனு அல்லது துட்ட காமினி என அறியப்பட்ட “காமினி அபய”தான். நீதிநெறி வழுவாத மன்னவன் – எதிரிகளும் எதிர்நிற்க அஞ்சும் வீரனான எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றி கொன்றானே அதே வீர(?)நாயகன் துட்ட கைமுனுதான். பல இட்டுக்கட்டிய கதைகளைச் சொல்லும் – தமிழர்களுக்கும் – சிங்களவர்களுக்கும் இனவாதத் தீயை முதலில் பற்ற வைத்த மகாவம்சம் நூலின் நாயகன்தான்.

அந்தத் துட்ட கைமுனு, சூழ்ச்சியால் எல்லாளனை போரில் வென்ற பின்னர், தனது வெற்றியைப் பறைசாற்றவும் பௌத்த மதத்தின் மீது தான் கொண்ட பற்றை வெளிப்படுத்தவும் அமைத்ததுதான் ருவான் வெலிசாய.

இந்த விகாரையை துட்டகைமுனு கட்டியபோது, நவரத்தினங்களையும் தங்கக் கட்டிகளையும், வெள்ளிக்கட்டிகளையும் கொட்டிக் கட்டினான் என்கிறது மகாவம்சம். ஆனால், சூழ்ச்சியாலும் சதியாலும் வென்ற போரில் சூறையாடப்பட்ட தமிழர்களின் சொத்துக்களையும், அவர்களைக் கசக்கிப் பிழிந்து பெற்ற வரிகளை வசூலித்தும், போர் கைதிகளாக பிடிபட்ட தமிழர்களை அடிமைகளாக்கி அவர்களை துன்புறுத்தி – வருத்தி அவர்கள் சிந்திய இரத்தத்திலும் – வியர்வையிலும் கட்டப்பட்டதுதான் இந்த விகாரை.

தமிழர்களை வெற்றி கொண்டதன் அடையாளச் சின்னமாக – அன்றைய போரில் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழர்களின் நினைவுச் சின்னமாக – பல்வேறு துன்பங்களையும் – சித்ரவதைகளையும் – அடக்குமுறைகளையும் தமிழர்கள் எதிர்கொண்டதற்கான சாட்சியமாகவும் நிமிர்ந்து நின்றதுதான் இந்த ருவான் வெலிசாய. இவ்வாறு தமிழின அழிப்பின் – தமிழர்கள் மீதான அடக்குமுறையின் அடையாளமாக நிற்கும் ருவான் வெலிசாயவில்தான் கோட்டாபயவின் அரசியல் பயணம் தொடங்கியது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனவழிப்பு உலகமே வர்ணிக்கும் “முள்ளிவாய்க்கால் இனவழிப்பை” வழிநடத்தியவர்களில் ஒருவர்தான் இந்த கோட்டாபய ராஜபக்ச. 2005 இல் தமிழ் மக்கள் வாக்களிப்பை புறக்கணித்தபோது – சிங்கள -பௌத்த தீவிர சக்திகளின் தெரிவாக இருந்தவர் இவருடைய மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ச. இவர், பதவியேற்றதும் இலங்கை வந்த முன்னாள் இராணுவத்தினனான கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவியேற்றார். தமிழர்களுக்கு எதிரான போரை – தனது சகோதரனின் நிறைவேற்று அதிகார ஆசியுடன் முன்னின்று நடத்தினார். இராணுவத் தளபதிகள் குற்றங்கள் இழைக்கவும் – அவர்கள் கட்டுக்கடங்காத போர் மீறல்களை மேற்கொள்ளவும் – சர்வதேச போர் விதிகளை காலில் போட்டு மிதித்து தமிழர்களுக்கு எதிராக அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டார்.

தமிழரின் தாயகத்தை – தமிழருக்கே உரித்தான அரசை மீளக் கேட்ட – அமைக்க முயன்ற விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனிக்கச் செய்யப்பட்டது. சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். அங்கு பல இன்னல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டார்கள் தமிழ் மக்கள். இவ்வாறு தமிழர்களை வெற்றிகொண்ட ராஜபக்ச சகோதரர்களில் ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ச 2010 தேர்தலில் போட்டியிட்டபோது, இலங்கையை முதன்முதலில் ஒருங்கிணைத்த – தமிழர்களை அழித்து – அடக்கிய – துட்டகைமுனு மன்னனுக்கு நிகராகக் கொண்டாடப்பட்டார் – போற்றப்பட்டார்.

2015 ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கு தடை ஏற்பட்டது. எனவே 2019 தேர்தலில் அவர்களுக்குப் பெருவெற்றி ஒன்று தேவைப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையைப் பறிகொடுத்த அவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கினார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அப்போதைய தலைவர் பண்டாரநாயக்க என்ன நோக்கில் தொடங்கினாரோ அதே இலட்சியப் பாதையில் – அதே சிந்தனையை முன்வைத்தே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தொடங்கப்பட்டது. சிங்கள – பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் ஆட்சிப்பீடம் ஏற அவர்களின் ஆசி மட்டுமே போதும் என்பதை மீண்டும் பறை சாற்றியது கோட்டாபயவின் வெற்றி.

துட்டகைமுனுவின் ஊரான திஸ்ஸமகரகமவை (அம்பாந்தோட்டை) சேர்ந்த கோட்டாபயவும், தனது அண்ணன் வழியிலேயே, சிங்கள – பௌத்தர்கள் போற்றும் நவீன துட்டகைமுனுவான கோட்டாபய ராஜபக்ச, துட்டகைமுனு மன்னன் தமிழர்களை வெற்றி கொண்டு அவர்களிடம் இருந்து கைப்பற்றிய செல்வங்களைக் கொண்டு கட்டிய விகாரையான ருவான் வெலிசாயவில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து. அங்கேயே பதவிப் பிரமாணத்தையும் செய்து சிங்கள – பௌத்தன் என்ற பெருமிதத்துடன் நவீன துட்டகைமுனுவாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈராயிரம் வருடங்களுக்கு முன்னர் வகைதொகையின்றி தமிழர்கள் அழிக்கப்பட்ட – தமிழர்களை அழித்தும் – வருத்தியும் பெறப்பட்ட செல்வங்களைக் கொண்டு கட்டப்பட்ட ருவான் வெலிசாயவில், “கோட்டாபய எனும் நான் இந்த நாட்டின் சகல மக்களையும் இன, மத, சாதி பேதமின்றி அனைவருக்கும் சேவையாற்றுவேன் என உறுதி ஏற்றிருக்கிறார்.

இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து விட்டேனே என துட்டகைமுனு கலங்கியபோது, “நமது மார்க்கத்தை நம்பாதவர்கள் தீய வாழ்வை மேற்கொண்டவர்கள் – மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக்கூடாதவர்கள்”, என உபதேசமளித்தனர் பிக்குகள். இதனால் துட்டகைமுனு மனம் மாறினான் என்கிறது மகாவம்சம்.

நவீன துட்டகைமுனுவான கோட்டபய ராஜபக்சவும் இதைப் பின்பற்றி துட்டகைமுனுவாகவே வாழ்வாரா? அல்லது கோட்டாபய என்ற “சிங்கள – பௌத்த ஆதிக்கராக சிறுபான்மை மக்களின் மனதில் இருக்கும் விம்பத்தை அழித்து முன்மாதிரியான தலைவராக மாறுவாரா? என்பதை இனிவரும் காலங்கள்தான் பதில் சொல்லும்.

-செங்கையான்

About இலக்கியன்

மறுமொழி இடவும்