கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் சாதித்தது என்ன..? ருத்திரன்-

2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு வடிவத்தை பெற்றிருந்தது. கடந்த காலத்தில் அகிம்சை ரீதியாக போராடிய தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கைகளையும், அபிலாசைகளையும் தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. மாறாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களை அடக்குவதிலும், அவற்றை இழிவுபடுத்துவதிலுமே கவனம் செலுத்தியிருந்தனர். இதன்காரணமாக தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி அடைந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலமை ஏற்பட்டிருந்தது. ஆயுத ரீதியாக தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பேரில் மஹிந்த அரசாங்கம் சர்வதேச நாடுகளின் உதவியுடன் முடிவுக்கு கொண்டுவந்திருந்தது. அதன்பின்னரான தமிழ் தேசிய அரசியல் என்பது மீண்டும் ஜனநாயக வழியையே நம்பி இருக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் தமது தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பையே நம்பிச் செயற்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்ததுடன், தமிழ் மக்களது அபிலாசைகளை முன்னிறுத்தியே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தது. அதன் அடிபபடையிலேயே தமிழ் மக்களின் ஆணையையும் அது பெற்றிருந்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 8 ஆண்டுகளில் எதைச் சாதித்து இருக்கின்றது என்ற கேள்வி இன்று எல்லோர் மனங்களிலும் எழுந்திருக்கின்றது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலின் போது பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து வழங்கிய ஆணையின் அடிப்படையில் அதிக பெரும்பான்மை பலத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையில் ஆட்சியமைத்தது. மாகாணசபைக்குள் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் இருக்கின்ற போதும் ஆளும் கூட்டமைப்பு உறுப்பினர்களே எதிர்கட்சி போன்றும் செயற்பட்டு வந்திருந்தனர். இதன் காரணமாகவே மாகாண சபைக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த குழப்பங்களை கட்டுப்படுத்த வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையாக இருந்தாலும் சரி அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அதனை கட்டுப்படுத்துவதை விடுத்து அந்த பிரச்சனைகள் கட்சிக்குள் விஸ்வரூபம் எடுக்கும் வகையில் செயற்பட்டிருக்கின்றனர்.

வடமாகாண சபை தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வைத்து வருகின்றனர். வடமாகாண சபை என்ன செய்தது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியும் இருக்கிறனர். வடமாகாணசபை என்பது அதிகாரமற்ற ஒன்று. அதற்குரிய அதிகாரங்களைப் பெற்று மக்களுக்கு சேவை செய்ய அது இன்னும் போராட வேண்டியே இருக்கிறது. மாகாணசபை அதிகாரங்களை வைத்து எதனையும் சாதித்து விட முடியாது என்பது கடந்த கால வரலாறு. இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சி, சமஸ்டி அடிப்படையில் ஒரு நிரந்தர தீர்வு உள்ளிட்ட மீளகுடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் பிரச்சனை என தமிழ் மக்கள் முன்னுள்ள பல பிரச்சனைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள் ஆணையைக் கோரியிருந்தது. இதனடிப்படையில் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் ஆணைமூலம் நேரடியாக தெரிவு செய்யப்பட்டதுடன், இரு உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்பட்டனர். இதனால் கூட்டமைப்பில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி இந்த அரசாங்கத்தை சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன…? 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வு வரும் என கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் முன்னர் கூறியிருந்தார். ஆனால் தற்போது 2017 ஆம் ஆண்டும் இறுதிக்காலண்டை அண்மித்துள்ளது. எந்த தீர்வை அவரால் பெற முடிந்தது. அல்லது எந்த தீர்வை பெற முடியும் என நம்பிக்கையை வழங்க முடிந்தது. குறைந்த பட்சம் தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்ய முடிந்தததா..?

2015 ஆம் ஆண்டு ஐ.நா மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவுமின்றியே அதே தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு 34-1 இன் மூலம் அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் ஆதரவுடன் இந்த காலநீடிப்பில் அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த கால நீடிப்பு வழங்கி 6 மாதங்கள் கடந்து விட்டது. இதன் பின் கிடைத்த மாற்றம் என்ன..?

வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சி பற்றி தேர்தல் மேடைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேசிவந்தனர். ஆனால் இன்று அரசாங்கம் வடக்கு, கிழக்கு இணைப்பு கிடையாது என கூறிவருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிலரும் வடக்கு, கிழக்கு இணைப்பு தற்போதைக்கு சாத்தியம் இல்லை என கூறுகின்றனர். ஒற்றையாட்சி முறைக்குள்ளேயே தீர்வு என அரசாங்கம் கூறுகின்றது. பௌத்த சமயத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என பௌத்த மகாநாயக்கர்கள் கோருகின்றனர். ஜனாதிபதி, பிரதமருடைய கருத்துக்கள் கூட அதனை ஆமோதிப்பதாகவே அமைந்திருக்கின்றது. இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக மீறிய நிலையில் ஒரு தீர்வை அரசாங்கம் திணிக்க முற்பட்டுள்ளது. நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் காத்திரமாக என்ன செய்திருக்கின்றது. குறைந்த பட்சம் மக்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் ஒன்றிணைத்து தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்த அழுத்தத்தை வழங்கியிருக்கின்றதா..?

கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று தற்போதும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இனவிகிதாசாரத்தை குழப்பும் வகையிலான குடிப்பரம்பல்கள், தமிழரின் ஆட்புல அடையாளத்தை சிதைக்கும் எல்லை மீள்நிர்ணயம் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணம் முழுமையாக பறிபோய் விட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என வடக்கிலும் நிலப்பறிப்புக்கள் தீவிரமாக இடம்பெறுகிறது. இதைத்தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் என்ன செய்ய முடிந்தது. குறைந்த பட்சம் பொருத்து வீடு வட பகுதிக்கு பொருத்தமற்றது என கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதனை எதிர்த்து வந்தனர். நீதிமன்றத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வடக்கில் 6000 பொருத்து வீடுகள் மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால் நேரடியாக வழங்கப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்றது. இதைக் கூட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து தடுக்க முடியாமல் போய்விட்டது. பொருத்து வீட்டைக் கூட தடுக்க முடியாத இவர்கள் தீர்வை பெற்றுத் தருவார்கள் என்று எவ்வாறு நம்ப முடியும்..?

காணாமல் ஆக்கப்பட்டோர் தமக்கு நீதி கோரி மேற்கொண்டு வரும் போராட்டங்களை அரையாண்டை எட்டியுள்ளது. போராட்டகளங்கள் அவர்களது சொந்த இடங்கள் போல் மாறி அந்த மக்கள் அந்த இடத்திலேயே நிரந்தரமாக இருந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அவர்கள் உள ரீதியாகவும் கடுமையாக பாதிபடபடைந்து வருகின்றனர். 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அவர்களது போராட்டத்தை முடித்து வைக்க முடிந்ததா..? அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து அந்த மக்கள் நம்பும் படியான வாக்குறுதியை வழங்கியாவது அந்த போராட்டத்தை முடித்து வைக்க முடியாத நிலையே தொடர்கிறது.

தமது வாகனக் கொள்வனவு தொடர்பிலும், பாராளுமன்ற விவாதங்களின் போது சம்மந்தம் இல்லாமலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். வடக்கில் இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புக் கோரி மாதக்கணக்கில் போராடுகிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த திட்டம் என்ன…? யுத்தம் மௌனிக்ச் செய்யப்பட்ட போது தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருந்த பிரச்சனைகள் இன்றும் தொடர்கிறது. இணக்க அரசியல் எனக் கூறி அரசாங்கத்துடனான உறவை வலுப்படுத்தி அந்த மக்களுக்காக செய்தவை என்ன…?

மாறாக வடக்குக்கு கொண்டு வரப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்களைக் குழப்பி மத்திய அமைச்சர் சார்பாக ஒரு குழுவும், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக ஒரு குழுவும் என பிரிந்து அத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் விட்டதே மிச்சம். வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் யாவரும் அறிந்ததே. ஆக, ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான இணக்க அரசியல் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரிச்சலுகைளையும், சொகுசு வாகனங்களையும், பாராளுமன்ற பதவிகளையும், வெளிநாட்டு பயணங்களையும், மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைமைப் பதவிகளையும் பெற்றுக் கொண்டதை தவிர மக்களுக்காக அவர்களால் முழுமையாக எதை செய்ய முடிந்திருக்கின்றது. ஜனாதிபதி, பிரதமருடன் விருந்துகளிலும், வீட்டு வைபவங்களிலும் பங்கு பற்றியதுடன் அவர்களை தமது வீடுகளுக்கும் அழைத்து கொண்டாட்டங்களை செய்ய முடிந்திருக்கின்றது. தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் அன்னியோன்னியமாக பழக முடியும் என்றால் அந்த நட்பையும், தொடர்பையும் பயன்படுத்தி மக்களுக்கான பிரச்சனைகளை ஏன் தீர்க்க முடியாது…? தமிழ் மக்களுக்காகவும் இவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. தமது கட்சியின் ஒற்றுமையையும் காக்க முடியவில்லை. இவ்வாறான நிலையில் இவர்களை நம்பி தீர்வுக்காக தமிழ் தேசிய இனம் காத்து இருப்பதன் மூலம் அதனை அடைய முடியுமா…? மக்கள் விழிப்படைந்து தமது தலைமைக்கும், பிரதிநிதிக்கும் அழுத்தம் கொடுக்காத வரை தமிழ் மக்களால் எதனையும் பெற முடியாது என்பதே களஜதார்த்தம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்