மாவீரர் நாள் நினைவேந்தலைக் குழப்ப யாழ். பல்கலை நிர்வாகம் கடும் முயற்சி – மாணவர்கள் பல்கலை வளாகத்துள் நுளைய இருநாள் தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடை விதித்து நாளைய பத்திரிகைகளில் பல்கலைக்கழக நிர்வாகம் விளம்பரம் வெளியிடுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நாளைய தினம் 27ஆம் திகதி மாவீரர் நாளை கடைப்பிடிக்க மாணவர்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி வெளியிட்டுள்ளார்.

இந்தப் பணி அவசர அவசரமாக இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

அனைத்துபீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளாகத்தினுள் 27.11.2019 மற்றும் 28.11.2019 ஆகிய தினங்களில் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதனை இத்தால் அறியத்தருகின்றேன்.

மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தினுள் நுழைவதனையும் அனுமதி அளிக்கப்படாத எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு இத்தால் அறியத் தருகின்றேன் என்று தகுதிவாய்ந்த அதிகாரி அறிவித்துள்ளார்.

முன்னதாக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் யாழ்.பல்கலைகழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும் நடாத்த கூடாது என மாணவர்களுக்கு பல்கலை நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை தகுதிவாய்ந்த அதிகாரி வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைவதற்கு தடை விதித்து அவர் விளம்பரங்களை வெளியிட அனுப்பிவைத்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்