யேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் 2019

யேர்மனி ஒபர்கவுசன் நகரத்தில் 27.11.2019 புதன்கிழமை தேசிய மாவீரர் நாள் மிக எழுச்சியாக உணர்வுகள் பொங்க நடைபெற்றது. யேர்மனியில் வாழும் தமிழ் மக்கள் ஓரிடத்தில் அணிதிரண்டு விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய எம் மாவீரச் செல்வங்களுக்கு கண்ணீர் மல்க தங்கள் இதய வணக்கத்தை சுடர் ஏற்றி கார்த்திகை மலர் தூவிச் செலுத்தினார்கள்.

பொதுச்சுடரினை யேர்மனியின் இடதுசாரிக் கட்சியின் ஒபர்கவுசன் பிரதிநிதி Henning Von Stolzenberg அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் திரு. இனியவன் அவர்கள் ஏற்றிவைத்தார். பின்பு சரியாக 13.35 நிமிடத்திற்கு மணியோசை ஒலிக்க பிரதான சுடரினை கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னைநாள் அரசியற் பொறுப்பாளரும், 19.8.1989ல் மாங்குளத்தில் நடைபெற்ற இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டவரான கப்ரன் வண்ணன்(இயற்பெயர் சீவரத்தினம் கலைஜீவன்)அவர்களின் சகோதரரும் பிறிமகாபன் நகரக் கோட்டப்பொறுப்பாளருமான திரு.சீவரத்தினம் கலைச்செல்வன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

பின்பு மாவீரர்களின் பெற்றோர்கள் சுடர்வணக்கம் மலர்வணக்கம் செலுத்த அவர்களுடன் பொதுமக்களும் இணைந்து கொண்டு வணக்கம் செலுத்தினார்கள். பிரத்தியேகமாக அமைக்கப் பெற்றிருந்த மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திற்குள் அணியணியாக வந்த மக்கள் அன்று முழு நாளும் வணக்கம் செலுத்தியதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

மக்கள் வணக்கம் செலுத்திய வண்ணம் இருக்கையில் நிகழ்வுகள் அருகிலிருந்த அடுத்த மண்டபத்தில் ஆரம்பமாகியது. முதலில் யேர்மனி தமிழீழம் இசைக்குழுவினரின் இசை வணக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவீரர் பெட்டகம் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. பின்பு கவிவணக்கம், நாடகங்கள், தனி நடனங்கள், பேச்சு, சிறப்புரை, என்பனவற்றோடு இறுதியாக எழுவோம் எனும் நாட்டியநாடகம் நடைபெற்றது. யேர்மனியின் முன்னணி 10 நடன ஆசிரியர்களின் மாணவிகள் பங்கெடுத்துக் கொண்டனர். தமிழீழத் தலைநகர் தந்த எம் கவி அகரப்பாவலனின் கவி வரிகளுக்கு தமிழீழ இசைப்புயல் இசைப்பிரியன் அவர்கள் இசையமைக்க 160 நடனக் கலைஞர்கள் மண்டபம் நிறைந்திருந்த மக்களை விடுதலை உணர்வின் உச்சிக்கு கொண்டு சென்றனர்.

இறுதியாக தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் எழுச்சிப் பாடலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்