டில்லி நிர்பயா வன்புணர்வு குற்றவாளிகளை தூக்கிலிட முடிவு!

2012-ல் இந்தியாவை மட்டுமல்லாது உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கும் 4 பேரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக டெல்லி திகார் சிறைச்சாலை தயாராகி வருகிறது. இருப்பினும், தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான சட்ட வழிகள் இன்னும் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசியாவிலேயே பெரிய சிறைச்சாலையான டெல்லி திகார் சிறையில் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக பீகாரின் பக்சார் சிறையில் இருந்து சிறப்பு கயிறுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்துதான் 2013-ல் அப்சல் குருவை தூக்கிலிடுவதற்கு கயிறு கொண்டு செல்லப்பட்டது. தூக்கிலிடுவதற்கு முன்னோட்டமாக, குற்றவாளிகளின் எடை மாதிரிகள் தூக்கிலிடப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் வெவ்வேறு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். சிசிடிவி கேமராக்கள் மூலமாக அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். சிறை எண் 3-ல் வைத்து அவர்கள் தூக்கிலிடப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தூக்கிலிடும் நபர் திகார் சிறையில் தற்போது இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவைப்படும்போது அந்த நபர் மற்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுவார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த வாரம் குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, கருணை மனு அனுப்பியிருந்தார். இதனை டெல்லி மற்றும் மத்திய அரசுகள் நிராகரித்துள்ளன. தற்போது இந்த மனு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இன்னொரு குற்றவாளி அக்சய் தாகூர் என்பவர் மறு சீராய்வு மனுவைத் தொடர்ந்துள்ளார். இதேபோன்ற மனுவை குற்றவாளிகள் வினய் குமார், முகேஷ் சிங், பவன் குப்தா ஆகியோர் தொடர்ந்தபோது நீதிமன்றம் நிரகாரித்திருந்தது.
கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளி வினய் குமார் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தனது சம்மதம் இல்லாமல் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் முக்கிய ஆவணங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

23-வயதான டெல்லி இளம்பெண் நிர்பயா ஓடும்பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டாள். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 16 நாட்கள் கழித்து அவரது உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2012 டிசம்பர் 16-ம்தேதி அவரை 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்து, இரும்புக் கம்பியால் சித்தரவதை செய்தனர். பின்னர் ஓடும் பேருந்தில் இருந்து அவரை தள்ளி விட்டனர்.
ஆடையின்றி, ரத்த வெள்ளத்தில் மிதந்த நிர்பயா மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உயிர் கடந்த 2012 டிசம்பர் 29-ல் பிரிந்தது.
இந்த வழக்கில் குற்றவாளியான ராம் சிங் சிறையில் தூக்கிட்டுக் கொண்டார். இன்னொறு குற்றவாளியான சிறுவன் ஒருவனுக்கு 3 ஆண்டுகள் காப்பகத்தில் இருக்க வேண்டும் என்பது தண்டனையாக வழங்கப்பட்டது.
மீதமுள்ள 4 பேரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்