முண்டு கொடுத்தவர்களிற்கு வாக்களிக்கவேண்டாம்?

நேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்!

கட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரை தெரிவு செய்யவேண்டும். அவர்களுக்கு வாக்களிக்க முயற்சிப்போம். நிராகரிக்க வேண்டியவர்களை அவதானத்துடன் நிராகரிப்போம். தெரிவுசெய்ய வேண்டியவர்களை அவதானிப்புடன் தெரிவு செய்வோம் -அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்

தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், எமக்கு முன் இருக்கின்ற தார்மீகக் கடமையை சரியானமுறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பொதுத் தேர்தல் தொடர்பாக மக்கள் முன் உள்ள சவால்கள் குறித்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேர்தலையொட்டி பெரும் மாயை ஒன்று எங்களைச் சுற்றி இருக்கின்றது. கட்சி, தேசியம், பிரதேசம், சாதியம் இவ்வாறு பல மாயைகளுக்கு ஊடாக தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய சூழல் உள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வட கிழக்கு மக்கள் பெரு அணியாக ராஜபக்சேக்களுக்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். அவர்கள் அல்லது நாம் சஜித்தை ஆதரிக்கின்றோம் என்பதற்கு அப்பால் எமது இனத்திற்கு எதிராக ராஜபக்சேக்கள் செய்த துரோகத்திற்காக அந்த வாக்கு அளிக்கப்பட்டது.

அத்தகைய நிலையில் இருந்த நாம் இந்தத் தேர்தலை எவ்வாறு சந்திக்கின்றோம் என்பதை நாங்கள் சிந்திக்கவேண்டும். யாருக்கு வாக்குபோடவேண்டும் என்பதை பலரும் கேட்கின்றார்கள்.

யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை ஒவ்வொரு நலன்விரும்பியும் தேசவிரும்பியும் சிந்திக்கவேண்டும். என்னிடமும் பலர் இதனைக் கேட்கின்றார்கள்.

ஒரு மதகுருவாக யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவது தவறான விடயம். ஒரு கட்சி சார்பாக நின்று நாங்கள் பேசமுடியாது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆகவே தமிழ் மக்கள் ஒரு தெளிவைப்பெறவேண்டும் என்பதை நாங்கள் சிந்திக்க தூண்டப்படுகின்றோம். இந்தத் தெளிவு என்பது தமிழ்த் தேசியத்திற்கான தெளிவாக இருக்கவேண்டும்.

வேலைவாய்ப்பை வழங்கக்கூடியவர்கள் அல்லது ஒரு சில திட்டங்களை செய்யக்கூடியவர்கள் சில வாய்ப்புக்களைத் தரக்கூடியவர்கள் என்பதற்கு அப்பால் எங்களுடைய தேசத்திற்கான விடுதலையைத் தரக்கூடியவர்கள் என்றோ அல்லது இன்நாள் வரையும் நாங்கள் முயற்சித்த போராட்டங்களுக்கான தீர்வுகளை அடையக்கூடியவர்கள், சர்வதேச ரீதியாக எமது பிரச்சினைகளை அணுகக்கூடியவர்கள் தெற்கில் எமது தேசத்திற்காக உழைக்கக்கூடியவர்கள் யார் என்பதை பட்டியல் இடவேண்டும்.

இன்று தெற்கு அரசியலுக்கு முண்டுகொடுக்கிறவர்களுக்கு நாங்கள் கொடுக்கின்ற ஒவ்வொரு புள்ளடியும் எமது இருப்புக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடியது. கிழக்கில் உருவாக்கப்பட்ட செயலணி வடக்கிற்கும் உருவாக்கப்படவுள்ளது.

ஆகவே தெற்குக்கு முண்டுகொடுக்கிறவர்கள் இதற்கும் ஒத்துழைப்புக் கொடுப்பார்கள் இதைத்தான் ரணில் அரசும் செய்தபோது தமிழ் கட்சிகள் தேசிய ரீதியில் செயற்படுகின்றவர்கள் கூட வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் விகாரைகள் அமைப்பது என்ற திட்டத்திற்கும் ஆதரவாக இருந்தார்கள்.

அதன் வளர்ச்சியாக கிழக்கில் உருவாக்கப்பட்ட செயலணி வடக்கிற்கும் உருவாகவுள்ளது. அவ்வாறு உருவாகின்றபோது தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகும். எதிர்காலத்தில் பெரும் குழப்பத்தை உருவாக்கும்.

ஆகவே நாங்கள் போடுகின்ற புள்ளடி எமது பெறுமதியானது. அதனை நேர்மையாக நேர்த்தியாக செய்யவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. எந்தக் கட்சி என்று நாங்கள் தெரிவு செய்வதா எந்த நபர் என்று தெரிவு செய்வதில் போராட்டம் உள்ளது.

கட்சி என்ற மாயைக்குள் சிக்கிவிடாது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரை தெரிவு செய்யவேண்டும். அவர்களுக்கு வாக்களிக்க முயற்சிப்போம். நிராகரிக்க வேண்டியவர்களை அவதானத்துடன் நிராகரிப்போம். தெரிவுசெய்ய வேண்டியவர்களை அவதானிப்புடன் தெரிவு செய்வோம்.

எமக்கு முன் இருக்கின்ற தார்மீகக் கடமையை சரியானமுறையில் நிறைவேற்ற நாமும் தெளிவடைவோம் அருகிலுள்ளவர்களையும் தெளிவடையச் செய்வோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்

About சாதுரியன்

மறுமொழி இடவும்