தமிழ் பிரதிநிதிகளுக்கு அழைப்பு-விக்னேஸ்வரன் தங்கள் பக்கம் என்கிறது சிங்கள தரப்பு!

அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முன்வருமாறு வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு கல்வியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் தலைமைத் தேரர்களை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்ட பின் கல்வியமைச்சர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

வடக்கில் அரசியல் மிகவும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் அல்ல.

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் கூட அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்படத் தயாராகி விட்டார்.

தாங்களே தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்றும், தமிழர்களின் குரல் என்றும், தமிழ் மக்கள் சார்ந்த தீர்மானங்களை எடுப்பதற்குத் தங்களிடமே அதிகாரம் இருப்பதாகவும் கூட்டமைப்பு இதுவரை நாடாளுமன்றத்தில் கூறிவந்தது. எனினும் இனி அவ்வாறு அவர்களுக்கு கூறமுடியாது.

இன்று வேறு சில தலைவர்களும் வடக்கிலிருந்து தெரிவாகியுள்ளனர். விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், அங்கஜன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர். தமிழ் மக்கள் பொறுப்புக்ளைப் பகிர்ந்து கொடுத்துள்ளனர்.

வடக்கில் கல்வி சார்ந்த ஆவல் அதிகரித்திருக்கிறது. அரசாங்கம் பாரபட்சம் காட்டாது. அனைவருடைய ஆதரவும் அரசாங்கத்திற்கு அவசியம்.

ஜே.ஆர். ஜயவர்தனவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேர்தல் முறையின் ஊடாக எவருக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறமுடியாது என்றார்கள்.

இன்று அது சூனியமாகிவிட்டது. ஆகவே அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோமென அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்