விலைபோன தமிழ்த் தரப்புக்களே தமிழ் வேட்பாளரை நிறுத்த முயற்சி : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

விலைபோயுள்ள தமிழ்த் தரப்புக்களே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர்,

“தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. இந்தத் தேர்தலை பகிஸ்கரிப்பதுதான். அதனையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

தமிழ் அரசியலில் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற கதை ஒன்று ஒரு சிலரால் பரப்பப்படுகின்றது.

அந்த விடயம் தொடர்பாக ஒரு சில தரப்புகள் பெயர்களை கூட முன்மொழிந்திருக்கின்றார்கள் குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுடைய பெயரைத் தானாகவே வந்து முன்மொழிந்திருக்கின்றார்.

முக்கியமாக ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்பின் தலைவர் மற்றும் இன்னுமொரு அணி மனோ கணேசன் ஆகியோரை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

முதலாவதாக இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டியிட்டு வெல்லக்கூடிய தரப்பு சிங்களத் தரப்பு. அதில் நான் நினைக்கின்றேன் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

அந்த சிங்களத் தரப்பு யாராக இருந்தாலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் பொறுப்புக் கூற சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம்.

ஏன் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அல்லது பாதுகாப்பு சம்பந்தமின்மை தொடர்பான இன்று இருக்கக்கூடிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஊடாக வரக்கூடிய மோசமாக நிலையாக இருக்கலாம்.

அரசியல் கைதிகளினுடைய நிலையாக இருக்கலாம் எங்களுடைய சொந்த காணிகளை பறிக்கின்ற விடயங்களாக இருக்கலாம் தாயகத்தில் தொடர்ச்சியாக சிங்களமைப்படுத்துகின்ற வேலை திட்டங்களாக இருக்கலாம்.

இவை அனைத்தும் சம்பந்தமாக சிங்களத் தரப்பினரால் நிறுத்தக்கூடிய அனைத்து தரப்புகளும் தமிழ் மக்களின் பக்கமாக இருந்தது கிடையாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்