இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓபிஎஸ் தரப்புக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி, இனியும் சுதாரிக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு பாதகம் ஏற்படும் எனக் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிமுறைகளுக்கு செயல்பட்டது தொடர்பாகவும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்களை அளித்துள்ளேன். குறிப்பாக, அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பி்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அப்போது, சூர்யமூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவிற்கு நோட்டீஸ் அனுப்பி பதிலை பெற்றுள்ளோம் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. அதேநேரம், தங்கள் தரப்பையும் கேட்ட பின்னரே முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும் கோரிக்கை மனுவை தாக்கல் செய்து இருந்தது. இதையடுத்து நீதிமன்றம் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து, இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பான மனுவின் மீது 4 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒருவேளை அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த பின்னர், நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் முடிவு பெறும் வரையில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படாது என்ற முடிவையும் தேர்தல் ஆணையம் எடுக்கலாம். அப்படி நடந்தால், இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயமும் உள்ளது. சட்டசபை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் அடுத்தடுத்து தோல்வியை எதிர்கொண்டு வரும் அதிமுகவிற்கு, இரட்டை இலை சின்னமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டால், அக்கட்சிக்கு அது பெரும் பின்னடைவு ஏற்படும் கருதப்படுகிறது.
கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வருகிறார். அதேசமயம், தன்னை அதிமுகவில் இணைக்க மறுத்தால், ஓபிஎஸ், இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு இணக்கமான முடிவை எடுக்க மாட்டார். எனவே இந்த விவகாரத்தில் ஒத்த கருத்து ஏற்பட வாய்ப்பில்லை. எனவே நீண்ட காலத்திற்கு இரட்டை இலை சின்னம் முடங்கவும் வாய்ப்புள்ளது.
உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவை ஓபிஎஸ் தரப்பினர் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி கூறுகையில், “இந்த தீர்ப்பு மிக முக்கியமான தீர்ப்பு. ஓபிஎஸ் கருத்தை கேட்கவேண்டும் என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் வழங்கி இருப்பது மிக அருமையான முடிவு. ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்னும் சிவில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில் எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது. முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில், ஓபிஎஸ், ஈபிஎஸ் மனுக்களை எல்லாம் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
ஆனால், அந்த உத்தரவை மீறித்தான், நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கப்பட்டது. இந்த வழக்கு முடியும் வரை, ஓபிஎஸ்ஸை கேட்காமல் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்பது மிகச் சரியான முடிவு. ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி இன்னும் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. இந்த விவகாரம் சிக்கல் என்ற நிலையில் தான் உள்ளது. இந்தச் சூழலில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிக முக்கியமானது.
இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பாதகம். அவர் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். இரட்டை இலை சின்னம் முடங்கிவிட்டால் அவருக்கு கிடைக்கும் 20% வாக்குகளும் போய்விடும். நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய தொய்வு ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.