முன்னாள் விடுதலைப் புலிகளை கைது செய்யும் நிலை உருவாகும்! – எச்சரிக்கும் அமைச்சர்

எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

வன்னி யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, தனிப்பட்ட விரோதங்களுக்காக யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அவர் தேசத்தில் சமாதானத்தை ஏற்படுத்தவே யுத்தம் செய்தார்.

இதன் காரணமான அவர் மீது போர் குற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் எவ்வகையிலும் இடம் கொடுக்கக் கூடாது.

மேலும், பிரித்தானியாவில் அடேல் பாலசிங்கம் வசித்து வருகின்றார், நோர்வேயில் நெடியவன் இருக்கின்றார். அதேபோன்று ருத்ரகுமாரன் உட்பட பல விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றனர்.

இவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல யுத்தத்தில் மிக முக்கிய பங்கினை வகித்ததோடு, பிரபாகரனுக்கும் மிக நெருக்கமாக செயற்பட்டவர்கள்.

தற்போதைய நிலையில் இலங்கை இராணுவம் மீது போர்க் குற்ற அழுத்தங்கள் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வருமானால் இலங்கையும் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் மீது சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், மகிந்த அரசாங்கத்தின் காலத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தைச் சார்ந்த 12000 உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்தும் இலங்கை இராணுவம் மீது போர்குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின், நாட்டில் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகள்
உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உருவாகின்றதைத் தடுக்கமுடியாது.

எனவே தமிழ் மக்களும் கடந்த காலத்தை மறந்து, கிடைத்த சமாதானத்தை வரவேற்று, நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தும் நிலையை உருவாக்காமல் செயற்பட வேண்டும் எனவும் போர் குற்ற விசாரணைகளுக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்