தற்போதைய தேவை என்ன…! விழித்துக் கொள்ளுமா பேரவை…?

தமிழ் தேசிய இனம் தனது உரிமைக்காக ஒரு சதாப்த காலத்திற்கு மேலாக போராடி வருகின்றது. அகிம்சை வழியாக தமிழ் தலைவர்கள் போராடிய போது அப்போது ஆட்சியில் இருந்த தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளும் அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஜனநாயக நீரோட்டத்தில் இருந்து உரிமைகளை கேட்ட தமிழ் தலைவர்களை கேலி செய்ததுடன், அவர்களது கோரிக்கைகளையும் உதாசீனம் செய்து தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஆள்வதிலும், அவர்களது ஆட்புல அடையாளங்களை அழிப்பதிலும் கவனம் செலுத்தியது. தமிழ் தேசிய இனம் தனக்கான நிலம், மொழி, காலசாரம், பண்பாடு, அடையாளம் என்பவற்றைக் கொண்ட ஒரு தனித் தேசத்திற்குரியவர்கள். அவர்களது தேசத்தை அல்லது இருப்பை அழித்து, இந்த நாட்டை பௌத்த சிங்கள நாடாக காட்டுவதற்கு அடிப்படை சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகள் முனைப்புக் காட்டினர். அதற்கு மாறி மாறி வந்த தென்னிலங்கை ஆட்சியாளர்களும் ஒத்துழைத்தனர். இந்த நிலையில் தமது தேசத்தின் இருப்பையும், இனத்தின் இருப்பையும் காப்பதற்கு தமிழ் இளைஞர்கள், யுவதிகள் ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிர்பந்தம் உருவாகியது.

ஜனநாயாக வழியில் நம்பிக்கையிழந்த தமிழ் இளைஞர்கள் ‘இரும்பும் இரத்தத்தின் மூலமே இலக்கை அடையலாம்’ என்ற ஜேர்மனிய ஐக்கியத்தின் கர்த்தா ஒட்டோமன் பிஸ்மார்க் அவர்களின் வழியைப் பின்பற்றியவர்களாக போராடினர். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டமாக சித்தரித்த தென்னிலங்கை அதனை நசுக்குவதற்கு சர்வதேசத்தின் உதவிகளைப் பெற்றுக் கொண்டது. தரைப்படை, கடற்படை, விமானப்படை கட்டமைப்புக்களைக் கொண்டவர்களாகவும், தம்மையே இலட்சியத்திற்காக ஆகுதியாக்க கூடியவர்களாகவும் தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்காக போராடியவர்கள் எழுச்சிபெற்றமையானது பிராந்திய நலனுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்ற சிந்தனையிலும் காய்களை நகர்த்திய இந்தியாவும், மேற்குலகமும் விடுதலைப் புலிகளை அழித்து போரை முடிப்பதற்கு கடந்த மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கியிருந்தது. விடுதலைப் புலிகள் இருந்த போது இந்து சமுத்திர பிராந்திய நகர்வுகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் அவர்கள் விளங்கியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மனிதகுலமே வெட்கித் தலைகுனியும் அளவுக்கு மோசமான மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்பவற்றை இழைத்து தமிழ் மக்களின் உரிமைக்கான தற்காப்பு போராட்டத்தை மஹிந்த அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான ஜனநாயக ரீதியான போராட்டம் தோல்வியடைந்த போது தமிழ் இளைஞர்கள், யுவதிகள் தனிநாட்டுக் கோரிக்கையுடன் ஆயுதம் ஏந்தும் நிலையை உருவாக்கியது. அதற்கு தயாராக அப்போதைய இளைஞர், யுவதிகள் இனப்பற்றுடனும், தேசப்பற்றுடனும், தமிழ் பற்றுடனும் இருந்தனர். 2009இல் முள்ளிவாய்கால் மண்ணில் மௌனமாகிய ஆயுதப்போராட்ட அழிவுகளும், மோசமான யுத்த மீறல்களும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பியது. அதனை மூலதனமாகக் கொண்டு சர்வதேச உதவியைப் பெற்று ஒரு நிரந்தர அரசியல் தீர்வைப் பெறுவதற்கான களச் சூழலை அது உருவாக்கியது. அதற்காகவே அத்தனை உயிர்களும் காவு கொள்ளப்பட்டது. அதற்காகவே அவ்வளவு இழப்புக்களும் ஏற்பட்டது. ஆனாலும் அந்த களச் சூழலை தமிழ் சமூகம் குறிப்பாக தமிழ் தலைமைகள் சரியாக கையாண்டிருக்கின்றதா…?

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் அரசியலை முன்னகர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் கூட்டமைப்பிடமே இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத வழிப்போராட்டத்தை நம்பியிருந்த காலத்திலேயே தமது ஜனநாயக ரீதியான அரசியல் நகர்வை ஆரம்பித்திருந்தனர். ஜனநாயக ரீதியாக தமது அரசியல் பிரதிநிதிகளாக தமிழ் தேசியக் கூட்மைப்பை உருவாக்கி அதனை பயன்படுத்தியும் வந்தனர். இதனை தற்போது சில அரசியல் தலைமைகள் மறுத்து விடுதலைப்புலிகள் கூட்டமைப்பை உருவாக்கவில்லை என கூறலாம். ஆனால் அது அல்ல உண்மை என்பதை வாக்களிக்கும் மக்கள் நன்கு அறிவர். விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இருந்து அகற்றப்பட்ட சூழலில் அவர்களின் கீழ் செயற்பட்ட கூட்டமைப்பிடமே தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தை ஜனநாயக வழியில் வழிநடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் இருந்தது. ஆனால் அவர்கள் கடந்த 8 வருடங்களில் பொறுப்புடன் செயற்பட்டு எதைச் சாதித்திருக்கிறார்கள்…? மாறிவந்த சர்வதேச சூழலை எவ்வாறு கையாண்டு இருக்கின்றார்கள்…? என்ற பலமான கேள்விகள் எழுகின்றன.

மஹிந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போது சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையாலும், சீனா சார்ப்பு நிலைப்பாட்டில் தனது நலனை முன் நகர்த்தி வந்தமையாலும் சர்வதேச சமூகத்தினதும், இந்தியாவினதும் கோபத்திற்கு ஆளானது. அதன் விளைவே 2015 இல் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. மஹிந்த அரசாங்கத்தை அகற்றுவதற்கும், நெருக்கடி கொடுப்பதற்கும் சர்வதேச சமூகம் தமிழர் நலனை முன்னிறுத்தி அழுத்தங்களைக் கொடுத்து வந்ததுடன், ஐ.நா மனிதவுரிமை பேரவையிலும் இலங்கைக்கு எதிராக பிரேரணைகளை கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தது. அந்த நேரத்தில் அந்த பிரேரணையை வலுப்படுத்துவதற்கும், சர்வதேச அழுத்தத்தை மேலும் அதிகரித்து தமிழ்மக்களுக்கான நிரந்தர தீர்வை நோக்கி நகர்த்துவதற்கும், அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்ப்பதற்குமான கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தர் அவர்களின் இராஜதந்திரம் தோற்றுப் போயிருந்தது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் மேற்குலகம் 2015 இல் ஐ.நா மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றறிய 30-1 தீர்மானம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவுமின்றியே அதே தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு 34-1 இன் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் ஆதரவுடன் இந்த காலநீடிப்பில் அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. கால நீடிப்பு வழங்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்து விட்டது. இந்த நிலையிலும் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தரின் இராஜதந்திரம் தமிழ் மக்கள் நலன்சார்ந்து வெற்றி பெற்று இருக்கின்றா…?

ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அந்த ஆதரவையும், இணக்க அரசியல் என்னும் பேரில் முன்னெடுக்கும் சரணாகதி நிலையையும் வைத்து இதுவரை தமிழ் மக்கள் நலன் சார்ந்து எதைச் சாதித்து இருக்கின்றது. தமக்கான பதவிகளைப் பெற்றுக் கொண்டது வேறு விடயம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கின்றது என்பதே இங்குள்ள கேள்வி. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. இதன் பின்னர் ஏற்பட்ட மாற்றம் ஏன்ன…? ஒரு ஜனநாயக இடைவெளி ஏற்பட்டிருக்கின்றது. அந்த இடைவெளிகளைப் பயன்படுத்தி மக்கள் தமது உரிமைக்காக போராடி வருகின்றார்கள். கடந்த ஆறு மாதங்களைக் கடந்து மக்களது நிலமீட்பு போராட்டங்களும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரிய போராட்டங்களும் தொடர்கின்றது. தென்னிலங்கையுடன் உள்ள உறவைப் பயன்படுத்தியும், சர்வதேசத்தின் உடனான இராஜதந்திர நகர்வைப் பயன்படுத்தியும், மக்கள் வழங்கிய ஆணையைப் பயன்படுத்தியும் இதற்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்கக் கூடிய சூழல் கூட்டமைப்பு தலைமைக்கு இருந்துள்ளதா…? அல்லது இருந்தும் அதனை மேற்கொள்ளவில்லையா..? என்றும் சிநத்திக்க வேண்டியுள்ளது. இந்த பின்னனிகளை நாம் நோக்கும் போது கூட்டமைப்பு தலைமை அல்லது அதன் நகர்வுகளில் ஏதோவொரு தொய்வு நிலை அல்லது மாற்றம் இருப்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இந்த நிலை தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் தகர்த்து வருகின்றது. இது குறித்து தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும். இதனால் நிரந்த தீர்வு நோக்கியும், இதுவரை கால போராட்டத்திற்கு பரிகாரம் தேடவும் தமிழ் மக்கள் முன் இரண்டு தெரிவுகளே உள்ளன.

ஒன்று, பலமான மக்கள் சக்தியாகயும், ஒரு மக்கள் இயக்கமாகவும் ஒன்றுபட்டும் அணிதிரண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு அழுத்தத் கொடுத்து அவர்களை தமிழ் மக்கள் பக்கம் திரும்பச் செய்ய வேண்டும். மக்களது அழுத்தம் காரணமாக அவர்களது தென்னிலங்கையுடனான மற்றும் சர்வதேசத்துடனான அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டு சரணாகதி நிலையில் இருந்து மீண்டெழுந்து மக்கள் நலன்சார்ந்து செயற்பட வைக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்படும்.

இரண்டாவது தெரிவு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது பயணிக்கும் பாதையில் சரணாகதி நிலையில் தென்னிலங்கையுடன் இணைந்து பயணிக்குமாக இருந்தால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் பெற முடியாத நிலை உருவாகும். கிடைப்பதைப் பெறுவோம் என்ற மனநிலையில் இருந்தால் இதுவரை உரிமைக்காக இழந்த இழப்புக்களுக்கு பதில் இல்லாது போயள்விடும். தென்னிலங்கை கொடுப்பதை பெற்றுவிட்டு மீண்டும் உரிமைக்காக ஜனநாயக ரீதியாக போராட வேண்டிய நிலையே உருவாகும். இதனால் அரசிற்கும், சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் மாற்றும் தலைமை ஒன்றை தமிழ் மக்கள் தேட வேண்டிய ஒரு சூழல் உருவாகும். அதன் மூலம் தமது அரசியல் அபிலாசைகளை முன்னகர்த்த வேண்டிய நிலமை ஏற்படும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நான்கு கட்சிகளைக் கொண்டிருக்கின்ற போதும் அதன்நகர்வுகளையும், போக்குளையும் தீர்மானிக்கும் சக்தியாக தமிழரசுக் கட்சியே இருக்கின்றது. ஏனைய பங்காளிக்கட்சிகள் கூட தலைமையின் செயற்பாட்டில் அதிருப்தி அடைந்தவர்களாகவும், மக்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ற தீர்வுத் திட்டம் வரும் என்ற நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய அரசியலை தற்போதைய சூழலில் நேர்மையுடனும், உறுதியுடனும் முன்னகர்த்தும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் கொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியும், தமிழரசுக் கட்சி தலைமையின் செயற்பாட்டில் விரக்தியடைந்துள்ள அதன் உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டிய நிலமையே உருவாகும். இந்த இடத்தில் தான் தமிழ் மக்கள் பேரவை பற்றிய ஒரு கேள்வி எழுகின்றது.

கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஈபிஆர்எல்எப், புளொட், தமிழரசுக் கட்சி அதிருப்தியாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னனி என்பவற்றைக் உள்ளடக்கியதாகவும், கல்வியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டளர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் என பல்துறை சார்ந்தவர்களையும் உள்ளடக்கிய மக்கள் இயக்கமாக தமிழ் மக்கள் பேரவை உருவெடுத்தது. இன்று அதன் உருவாக்கம் இரண்டாம் வருட முடிவை நோக்கி நகர்கிறது. வடக்கிலும், கிழக்கிலுமாக உரிமைக்காக அலையென திரண்ட மக்கள் எழுச்சியுடன் இரண்டு எழுக தமிழ் பேரணியை நடத்தியுள்ளதுடன், அரசியல் அமைப்பு சீர்திருத்த வரைவு ஒன்றையும் தயாரித்து வழங்கியுள்ளது. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை வலுப்படுத்தும் முகமாக ஒரு கதவடைப்பு போராட்டத்தையும் நடத்தியிருந்த நிலையில், தற்போது புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் வேலைத்திட்டத்திலும் இறங்கியுள்ளது. வரும் 5 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அந்த கருத்தமர்வு இடம்பெறவுள்ளது. இதில் பல துறைசார்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன் பின்னர் ஏனைய மாவட்டங்களிலும் அதனை முன்னகர்த்தவுள்ளது. பேரவையின் உடைய இந்த நகர்வுகளுக்கும், கூட்டமைப்பு தலைமையின் நகர்வுகளுக்கும் இடையில் நிறையவே வேறுபாடுகள் உள்ளது. மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ள பேரவை மக்களது அபிலாசைகளையும், கோரிக்கைளையும் முன்னகர்த்தும் அரசியல் சக்தியாகவும், தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்னகர்த்தும் அரசியல் அமைப்பாகவும் எதனை இனங்காட்டப் போகின்றது. அவ்வாறானதொரு சக்தியை அடையாளப்படுத்தாத வரை விழலுக்கு இறைத்த நீராகவே அவர்களது கருத்துக்களைக் கேட்டுவிட்டு அதற்கு எதிர்மாறாக செயற்படும் கூட்மைப்பு தலைமைக்கு பின்னாலேயே தேர்தல் அரசியலுக்காக மக்கள் செல்ல வேண்டிய நிலை உருவாகும். இதனை புரிந்து கொண்டு இனியாவது விழித்துக் கொள்ளுமாக தமிழ் மக்கள் பேரவை..?

கிருஸ்ணகோபால்-

About இலக்கியன்

மறுமொழி இடவும்