தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக இராணுவத்தை மாட்டிவிடக் கூடாது

இராணுவத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் தளபதிகள் தமக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் தமக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்த ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, தமக்கு எதுவும் தெரியாது என்றும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து, வன்னிப்படைகளின் தளபதியாக இருந்த போது, ஜெனரல் ஜயசூரிய குற்றங்களை இழைத்தார் என்றும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட்டால் அவருக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.

இவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.

“ஜெனரல் ஜயசூரியவின் பதவிக்காலத்தில் நான் அவமானப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அவரைப் பழிவாங்க முயற்சிக்கவில்லை.

போர்க்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்து, பெறுமதிவாய்ந்த சேவையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இராணுவம் மதிக்கிறது.

நாட்டுக்காக, 28 ஆயிரம் அதிகாரிகளும் படையினரும் தமது உயிர்களை இழந்திருக்கின்றனர்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்து வருத்தமளிக்கிறது.

இராணுவத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் தளபதிகள் தமக்கிடையிலான பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது ‘ என்று தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்