சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் சுய நிர்ணய உரிமையை ஏற்கவில்லை -சட்டத்தரணி குருபரன்.

இலங்கையின் உயர் நீதிமன்றம் தமிழர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பரப்புரை செய்து வரும் நிலையில், அவ்வாறு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளக சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கு.குருபரன் அடியோடு மறுத்துள்ளார். மேலும் 13 ஆம் திருத்த சட்டத்தை ஒத்ததாக புதிய அரசியலமைப்பு வர போகின்றது எனவும் எதிர்வு கூறியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவு படுத்தல் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் சமஸ்டி சாத்தியமா? புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி சமஸ்டி என்ற பதங்கள் தங்கி வெளிப்படையாக இனங்காணப்பட வேண்டுமா? என்ற தலைப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும் ஒற்றையாட்சி அடிப்படையில் தான் தீர்வு என்று திரும்ப திரும்ப சொல்கின்றார்கள். ஆனால் எம்மத்தியில் எங்களுடைய தலைவர்கள் அவர்கள் ஒற்றையாட்சியை தாதாண்டி வந்துவிட்டார்கள் என்று கூறுவது எந்த அடிப்படையில் என்ற கேள்வி எழுகின்றது. பொறுப்புக் கூராலக இருந்தாலும், அரசியல் தீர்வாக இருந்தாலும் மைத்திரிபால சிறிசேனவினால் ராஜப்கசவால் வகுத்த எல்லைகளை தாண்டி வர முடியவில்லை. ஏனென்றால் சிங்கள பௌத்த வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டும் என்றால் முன்னாள் ஜனாபதி மஹிந்த எந்த நிலைப்பாடுகளை எடுத்தாரோ அதே நிலைப்பாடுகளில் இருந்து எள்ளளவும் மாற்றம் இல்லை என்று சொன்னால் தான் தாங்கள் தொடர்ந்தும் அரசியல் நிலைக்கலாம் என அவர்கள் நம்புகின்றார்கள்.

இங்கு சிறிய நிலம் விடுவிக்கப்பட்டாலும், விடுவிக்கப்படவில்லை என்றே தெற்கில் இன்றைய அரசாங்கம் பிரச்சாரம் செய்கின்றது. இதற்கு காரணம் ராஜபக்ச வகுத்த எல்லைகளை தாண்டி வராமல் அவர்கள் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் ஆழமாக பார்த்தால் இது ராஜபக்ச வகுத்த எல்லை கூட அல்ல, சிங்கள பௌத்த கருத்தியல் காலம் காலமாக வகுத்து வைத்துள்ள எல்லைக்குள் நிற்கின்றார்கள். ஆகவே அவர்கள் ஒற்றையாட்சி என்ற பதத்தில் தொங்கி பிடித்து நிற்பது சிங்கள பௌத்த அரசியல்வாதிகள் தான். தமிழர்களில் சிலர் இருக்கின்றாகள். சமஸ்டி என்ற பெயர் புதிய அரசியலமைப்பில் வராவிடால் நிராகரித்து விடுவார்கள்.

அவர்கள் தீவிரமான போக்கை கொண்டவர்கள் அவர்களால் தான் தீர்வு குழம்பி விடும் என்றால், ஒற்றையாட்சி என்ற பதம் அரசிலமைப்பில் வர வேண்டும் என கோருவது தென்னிலங்கை அரசியல் வாதிகள். ஏனென்றால் சிங்கள பௌத்த கருத்தியல் வகுத்து வைத்துள்ள எல்லைகளை தாண்டி வர அவர்கள் தாயரில்லை. இதனால் தான் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கூட ஒருவரையும் தொட கூட விட மாட்டேன் என ஜனாதிபதி மைத்ததிரிபால கூறியுள்ளார். ஒரு பக்கம் நாங்கள் செய்கின்றோம் என கூறி வெளி நாடுகளுக்கு காட்டும் தரப்பு, இன்னொரு தரப்பு இந்த புதிய அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும். ஆகவே அங்கு கூறுகின்ற எல்லாவற்றையும் இங்கு நாங்கள் செய்யேலாது என நினைக்கும் தரப்பு.

இந்த கட்டத்தில் புதிய அரசியலமைப்பு முயற்சி ஒன்றை செய்து முடித்து விட்டோம் என வெளிநாடுகளுக்கு காட்டும் தேவை உள்ளது. இதனால் தான் புதிய அரசியலமைப்பை ஒற்றையாட்சி என்றும் சொல்ல வேண்டாம். சமஸ்டி என்றும் சொல்ல வேண்டாம். உள்ளடக்கத்தில் என்ன உள்ளது என்று பாப்போம் என எமது தமிழரசியல் தலைமைகள் கூட கூறுகின்றனர். நாங்கள் போண்டாவை சாப்பிட்டு விட்டு வாய்ப்பன் என்று கூற முடியாது. அதே போன்று வாய்ப்பனை சாப்பிட்டு விட்டு போண்டா என்று கூற முடியாது. ஒரு பண்டத்தை செய்து அதனை சிங்கள மக்களுக்கு ஒற்றையாட்சியாகவும், தமிழ் மக்களுக்கு இதில் சமஸ்டியின் கூறுகள் உள்ளன. படிப்படியாக அங்கு போகலாம் என கூறலாம்.

ஒரே பண்டத்தை இரு வேறாக விற்கும் இராஜதந்திரத்தில் தான் எங்களது தமிழ் தலைமைகள் உள்ளன. லேபில்கள் முக்கியமில்லை உள்ளடக்கத்தில் இருப்பது தான் முக்கியம் என்றால், உள்ளடக்கத்தில் இருப்பதை ஏன் வெளிப்படையாக கூற முடியாது? லேபில் இல்லாமல் சிங்களத்தில் ஏக்கிய என பொருள்படும் வகையில் அரசியலமைப்பு வந்தால் உயர் நீதிமன்றம் என்ன சொல்லும்? ஒற்றையாட்சியின் கருது கோளாக தான் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமுள்ளது. இது எங்களுடைய வரலாறு. அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகர் ஒருவரை சந்தித்த போது, 13 ஆம் திருத்த சட்டம் இந்தளவு மோசமாக பொருள்கோடல் படுத்தப்படும் என எதிர்பார்க்கவில்லை என கூறியிருந்தார்.

இதே நிலை தான் புதிய அரசியலமைப்புக்கும் வரும். ஆகவே தெளிவான கேள்விகளுடனும், விளக்கங்களுடனும் இருக்க வேண்டும் என்பது அவசியமாகவும். சமஸ்டி அல்லது ஒற்றையாட்சி என்று இரண்டுமே இல்லாவிட்டாலும் அந்த அரசியலமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் என்பது நாங்கள் அறிந்த வரலாறு. ஆகவே தான் உள்ளடக்கம் நல்லா இருந்தாலும் தலைப்பு அவசியம் என்று வலியுறுத்துகின்றோம். உள்ளக சுய நிர்ணய உரிமையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டுள்ளது. என ஒரு தரப்பு பரப்புரை செய்து வருகின்றது. ஆனால் அந்த தீர்ப்பில் கடைசி பந்தி தான் நீதிபதியின் தீர்ப்பாக உள்ளது.

இந்த வழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் தோன்றிய சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தில் தான் உள்ளக சுய நிர்ணயம் என கூறியுள்ளார்கள். இது கனடா உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்கள். ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளக சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டதாக இல்லை என்பது அந்த தீர்ப்பை பார்த்தால் தெரியும். சமஸ்டி என்று வந்தாலும் உள்ளடக்கத்தில் ஒற்றையாட்சி கூறுகள் இருக்கலாம் எனவும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. எனினும் சமஸ்டி பிரிவினை அல்ல என்பதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தீர்ப்பை கவனமாக பார்த்தால் உள்ளக சுய நிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது தவறான கருத்தாகும்.

இறுதியாக அரசியலமைப்பு ஆக்கத்தினை தங்களுடைய சர்வதேச உறவுகளில் ஏன் முக்கியத்துவப்படுத்துகின்றனர்? பொறுப்புக்கூறலை இல்லாமல் செய்வதற்கு. இரண்டாவது ஒற்றையாட்சி சமஸ்டி என்ற பதங்கள் இல்லாமல் வரகூடிய அரசியலமைப்பு கிட்டத்தட்ட 13 ஆம் திருத்த சட்டத்தை ஒத்ததாக வரக்கூடிய இன்றைய அரசியலமைப்பு வெறுமனே ஒற்றையாட்சி என்ற பதத்தை கொண்டிருக்கா விட்டால் மாத்திரமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்பது தொடர்பில் கவனமாக பதில் கூற வேண்டும். என தெரிவித்தார் –குருபரன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்