புலிகளை அழிக்கவும், புலிகளுக்கும் உதவிய சர்வதேச சமூகத்திடமே விசாரணை நடத்த வேண்டுமாம் – மேல் மாகாண முதல்வர்!

போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டுமெனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்க உதவிய சர்வதேச சமூகத்திடமே முதலில் விசாரணை செய்ய வேண்டுமென மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இன்று மனித உரிமைகள் தொடர்பில் பேசுபவர்களே புலிகள் அமைப்பிற்கு உதவியதாகவும் குற்றம்சாட்டினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த இசுறு தேசப்பிரிய ஜெகத் ஜயசூரிய தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே தவிர அரசாங்கத்தினதோ, அவர் சார்பு கட்சியினதோ கருத்தல்ல.

மேலும் ஜெகத் ஜயசூரிய இராணுவத் தளபதியானது மைத்திரிபால சிறிசேனவின் காலத்திலேயே. ஜனாதிபதியாக மைத்திரி பதிவியேற்றதன் பின்பு சர்வதேச ரீதியாக இராணுவத்தினருக்கு மாத்திரமல்லாது எமது நாடு தொடர்பிலும் ஏற்பட்டிருந்த களங்கத்தை இல்லாது செய்துள்ளார்.

இது நாட்டிற்குள் ஒருவருக்கு ஒருவர் இருக்கும் பிரச்சினையே தவிர, சர்வதேச பிரச்சினையல்ல. யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென்றால் எமது நாட்டின் மீதோ, அரசாங்கத்தின் மீதோ அல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போர் தொடுப்பதற்கு உதவி செய்த அல்லது புலிகளுக்கு உதவி செய்த வெளிநாடுகளின் மீதுதான் விசாரணை நடத்த வேண்டும்.

அது அமெரிக்காவாகவும் இருக்கலாம் எந்த நாடாகவும் இருக்கலாம். இன்று மனித உரிமைகள் தொடர்பில் பேசும் அவர்கள்தான் விடுதலைப் புலிகளுக்கு நிதி வசூலிக்க, ஆயுதங்களை கொள்வனவு செய்ய சுதந்திரத்தை வழங்கியிருந்தார்கள். ஆகவே தண்டனையை அவர்களுக்கே வழங்க வேண்டும் என இசுறு தேசப்பிரிய தெரிவித்தார்.

ஈழதேசம் இணையம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்