சசிகலாவின் பதவியை பறித்தது எடப்பாடி தரப்பு!

சசிகலா அதிமுகவின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது செல்லுபடியாகாது என்றும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு முழு அதிகாரம் அளித்தும் அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மிக பரபரப்பான சூழ்நிலையில், பலத்த பாதுகாப்புக்கிடையே சென்னை வானகரத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று (12) காலை திட்டமிட்டபடி தொடங்கியது.

இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

அவற்றில், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் வி.கே. சசிகலாவின் பொதுச் செயலர் நியமனம் செல்லாது என்ற அறிவிப்பும், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு முழு அதிகாரம் அளித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதாவது, பொதுச் செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பொதுச் செயலருக்கான அதிகாரங்கள் கட்சியின் ஒருங்கிணைப்புத் தலைவர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ளது என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஒருங்கிணைப்புத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் வழிகாட்டும் குழு அமைக்கப்படும். அதிமுக வழிகாட்டுதல் குழுவில் 15 பேர் இடம்பெறுவார்கள். வழிகாட்டும் குழுவுக்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒருவரை கட்சியில் சேர்க்கவோ, நீக்கவோ எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிகாரம் அளித்து பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கட்சி விதிகளில் மாற்றம் செய்ய வழிகாட்டும் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. மேலும், கட்சியின் யாப்பின் 19 ஆவது பிரிவில் திருத்தம் செய்ய அனுமதி வழங்கி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலராக ஜெயலலிதாவே இருப்பார். கட்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எனவே, இனி அதிமுகவில் பொதுச் செயலாளர் பொறுப்பு என்பது கிடையாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பொதுச் செயலாளர் பதவி கிடையாது என சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் கே.பி. முனுசாமியும், வைத்திலிங்கமும் செயல்பாடுவார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்