எதிர்க்கட்சிகள் ராஜினாமா?

எதிர்கட்சிகள் கூண்டோடு ராஜினாமா செய்தால் சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்தும் நெருக்கடி ஆளும் கட்சிக்கு ஏற்படும்.

சபாநாயகர் தனபால், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை நேற்று கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்தது அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

பதவி இழந்த 18 எம்.எல்.ஏ.க்களும் சபா நாயகர் உத்தரவை எதிர்த்து, தங்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 98 பேர் என்ன முடிவு எடுக்க உள்ள னர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி ஆலோசிக்க தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை கூட்டப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டபடும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு வழக்கில் கூறப்படும் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்படுகிறது. அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் தற்போது 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தினகரன் அணியை சேர்ந்த 18 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக 112 பேரும் கூட்டணியில் 3 பேர் உள்ளனர். தி.மு.க. கூட்டணி கூண்டோடு ராஜினாமா செய்தால் சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்தும் நெருக்கடி ஆளும் கட்சிக்கு ஏற்படும்.

தி.மு.க. கூட்டம் பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

தமிழகத்தில் நிலவும் குழப்பமான சூழ்நிலையில் இன்று தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூடுகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போதைய சூழ்நிலையில் எதிர்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை இவ்வாறு அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்