அக்கரை சுற்றுலா மையத்தை அகற்றக்கோரி 5 ஆவது நாளாக தீர்வின்றித் தொடரும் மக்களின் போராட்டம்!

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குற்பட்ட இடைக்காடு அக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று சனிக்கிழமை 5 நாளாகத் தொடர்ந்து வருகின்றது.

கடற்கரைப் பிரதேசங்களை அழகுபடுத்தி வருமானம் ஈட்டும் திட்டத்தின் கீழ் அப்பகுதி மக்களின் கருத்துக் கேட்பின்றி அமைக்கப்பட்டிருக்கும் இச்சுற்றுலா மையத்திற்கு வரும் இளைஞர்-யுவதிகளால் பெரும் கலாச்சார சீரழிவு இடம்பெறும் இடமாக உருவெடுத்துள்ளதாக கூறி அதனை முறைப்படுத்த வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்கரை பகுதி மாதர்சங்கப் பிரதிநிதியான அமுதா என்பவர் நீராகாரம் ஏதுமின்றி போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் சுழற்சி முறையில் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேரக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி உரிய கண்காணிப்பும் இன்றி முழு சுதந்திரமான சூழலில் இயங்கிவரும் கடற்கரை சுற்றுலா மையத்திற்கு வரும் இளைஞர்கள் உள்ளிட்டோர் அங்கேயே மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதாகவும், இளைஞர்-யுவதிகள் பட்டப்பகலிலேயே ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் எமது பகுதியில் உள்ள இளைஞர்-யுவதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

நாம் இன்று அவ்விடத்திற்கு சென்ற போதுகூட பதின்ம வயதுடைய இளைஞனும் யுவதியும் முறைகேடான நிலையில் இருந்தனர். எம்மைக் கண்டதும் உடனடியாக இருசக்கர வாகனத்தில் ஏறி அவசரமாக வெளியேறினர்.

அதைவிட இச்சுற்றுலா மையம் அமைந்துள்ள பகுதி மது-போதை பயன்பாட்டிற்கு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மதுப்பாவனையின் சான்றாக மதுப் போத்தல் ஒன்று அங்கு காணப்பட்டது. அதுகுறித்து வினவியபோது கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வு என்ற பெயரில் கோப்பாய் பிரதேச செயலர் உள்ளிட்ட குழுவினர் இங்கு வந்து சுத்தம் செய்து சென்றார்கள். இல்லையென்றால் திரும்பும் இடமெங்கும் மதுப் போத்தல்கள் இருப்பதைக் காணமுடியும். இதுகூட இப்ப கடல்குளித்துக்கொண்டிருக்கிறாக்கள் கொண்டுவந்து குடித்துவிட்டு போட்டதுதான் எனத் தெரிவித்தார்கள்.

வருமானம் வருகின்றது என்பதற்காக சமுதாய சீரழிவிற்கு வித்திடும் கடற்கரை சுற்றுலா மையத்தினை தொடர்ந்தும் முறைகேடான முறையில் இயங்கவிடுவது ஏற்புடையதல்ல. 5 ஆவது நாளாக நீராகாரம் கூட இன்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் இருக்கும் அமுதா என்பவரின் உடல் நிலை இன்று மிகவும் பாதிப்படைந்துள்ளது.

சாகும்வரை போராட்டம் என்றளவிலான அதிதீவிரப் போராட்டதில் ஈடுபட்டிருக்கும் மக்களின் கோரிக்கையை செவிசாய்க்காது இருப்பது மக்கள் விரோத செயற்பாடாகும். சுற்றுலா மையத்தை சிறுவர் பூங்காவாக மாற்றவும் சமுதாய சீரழிவுகள் நடைபெறாவண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து முறைப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் விடுக்கும் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற கோப்பாய் பிரதேச சபை மற்றும் வட மாகாண சபை நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுக்க நாமும் வலியுறுத்துகின்றோம்.

செய்தி மற்றும் காணொளி-புகைப்படங்கள் ஈழதேசம் செய்தியாளர் மு.காங்கேயன்!

About இலக்கியன்

மறுமொழி இடவும்