வித்தியாவுக்கு கிடைத்த தீர்ப்பு துணிச்சலானது: கஜேந்திரன்!

வித்தியா கொலை வழக்கில் துணிச்சலான நல்லதொரு தீர்ப்பினை வழங்கிய ரயல் அட்பார் நீதிமன்றின் நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

வித்தியா கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் கோவத்திற்குள்ளாக்கியது. இதனால் கொலைக்கு நீதி கோரி பல போராட்டங்களும் நடைபெற்றன.

குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுவிஸ்குமாரை பொலிஸார் விடுவித்திருந்தனர். இதனை தீர்ப்பு வழங்கிய நீதிபதியும் சுட்டிக்காட்டியிருந்தார். சுவிஸ்குமார் விடுவித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நீதிமன்றம் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்றம் மீதான தாக்குதல் சட்டத்திற்கு முரணானது. ஆனலும் அத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் பொலிஸாரே.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும், அவர்களின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 25 ஆம் திகதியில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுடைய உடல் நிலை தற்போது மோசமடைந்துள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்