ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவுவதற்குத் தேவையான நிதியுதவியைத் தமிழக அரசே செய்ய வேண்டும். –சீமான் வலியுறுத்தல்

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஐக்கிய அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 1636-ம் ஆண்டுத் தொடங்கப்பட்ட உலகின் முன்னணி பல்கலைக்கழகம் ஹார்வர்டு பல்கலைக்கழகமாகும். 350 ஆண்டுகள் பழமைவாய்ந்த இப்பல்கலைக்கழகமானது, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது. இதில் ஆய்வுசெய்யப்பட்டு வெளியிடப்படும் ஆராய்ச்சி முடிவுகள் யாவும் உலகினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குப் படித்த மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்களுள் 47 பேர் உலகின் உயரிய விருதாகக் கொண்டாடப்படும் நோபல் பரிசினைப் பெற்றிரருக்கிறார்கள் என்பது இப்பல்கலைக்கழகத்தின் சிறப்பினை விளக்குவதாகும். இத்தகைய ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென்று இருக்கையை அமைப்பதன் மூலம் தமிழைப் பன்னாட்டு அளவில் கற்கவும், ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு உலகின் தன்னிரிகல்லா உயர்தனி செம்மொழியான தமிழை உலகின் முதல் மொழியாக நிறுவுவதற்கும், தமிழின் இனிமையையும், மொழிவளத்தையும் பன்னாட்டு அளவில் பறைசாற்றுவதற்கும் ஓர் அரிய வாய்ப்பாக அமையும். தமிழின் தொன்ம இலக்கியங்களும், காப்பியங்களும் உலகளவில் ஆராயப்பட்டுத் தமிழர்தம் அறிவுக்கூர்மை உலகினரால் உணரப்படும் உன்னதத்தருணங்கள் அரங்கேறும்.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படுவதன் மூலம் தமிழ்த்துறைக்கு எனத் தகுதிகள் யாவும் வாய்க்கப் பெற்ற ஒரு பேராசிரியரை நியமித்து, அவருக்குக் கீழ் தமிழ்ப்புலமை நிறைந்த ஆசிரியர் பெருமக்களைச் சர்வதேசச் சமுதாயத்திற்குத் தமிழைக் கற்றுத்தரப் பணிக்குமர்த்தும். இதன்மூலம், தமிழின் இலக்கண இலக்கியங்கள், காப்பியங்கள், தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல் முறைகள், அறிவியல் நுட்பங்கள், தொன்ம வரலாறு, தொல்லியல் சான்றுகள் என்பது குறித்தான ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டு ஜி.யு.போப்பும், வீரமாமுனிவரும் அறிந்த தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகினர் அறிய வழிவகைச் செய்யப்படும். தமிழ்மொழியானது எத்தளத்திலும் நிலைபெறாது இருந்ததன் விளைவாகவே தமிழர்களுக்குத் தங்கள் மொழி குறித்துத் தாழ்வு மனப்பான்மை மேலீட்டு அந்நிய மொழி மோகத்தில் ஆங்கிலக் கவர்ச்சியில் வீழ்ந்து போயினர். தமிழ்ச்சமூகத்தில் புரையோடிப்போயிருக்கிற அத்தகைய அடிமை மனநிலைக்கு மருந்திடும் அருபெரும் பணியாக ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் பெரும்பணி அமையும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

அத்தகைய அளப்பெரும் பணிக்காய் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உழைத்து வருகிற பெரும் மதிப்பிற்குரிய மருத்துவர் ஜானகி ராமன் அவர்களும், மருத்துவர் திருஞானசம்பந்தம் அவர்களும் போற்றத்தக்கவர்கள்; தமிழ்த்தேசிய இனத்தின் வருங்காலத் தமிழ்த்தலைமுறையினரால் கொண்டாடத்தக்கவர்கள். ஹார்வார்டு பல்கலைக்கழகத்திற்குள் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ஆறு மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாய்) நிதியை இரண்டாண்டுக்குள் திரட்ட வேண்டும் என்று காலநிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை தாங்களே அளிப்பதாக மருத்துவப்பெருந்தகைகள் இருவரும் அறிவித்துள்ளனர். இதனால், மீதமிருக்கும் 5 மில்லியன் டாலர் நிதியை உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களிடையே திரட்டுகிற பணிகள் நடந்தேறி வருகிறது. மொத்த நிதியையும் இப்போதே திரட்டி முடித்துவிட்டால் ஓராண்டுக்குள்ளேயே இருக்கையை அமைத்துவிடலாம். ஆனால், இதுவரை 3 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே திரட்டப்பட்டிருக்கிறது என்பது கவலைக்குரியதாகும்.

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழகத்தில் இருந்து அந்நிலத்தை ஆளும் அரசு இதற்காக எந்த முன்னெடுப்புகளையும் செய்யாது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. ஆகையினால், தமிழ்த்தாயை அரியணை ஏற்றுவதற்குரிய அரிய வாய்ப்புகள் கனிந்துவந்தபோது தமிழகத்தை ஆண்ட அரசு துணைபுரியவில்லை என்ற வரலாற்றுப்பழிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு உள்ளாக வேண்டாம் என்று அன்போடு அறிவுறுத்துகிறேன். தமிழுக்குத் தனியாகப் பல்கலைக்கழகம் அமைத்த அதிமுக நிறுவனர் எம்ஜியாரின் நூற்றாண்டுவிழா நடக்கும் இவ்வேளையில் இன்னொரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ அவர் வழி வந்த அரசு நடவடிக்கை எடுத்தது என்பதே அவருக்கு இவ்வரசு செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்று கருதுகிறேன். எனவே, ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்குத் தேவையான நிதியுதவியைத் தமிழக அரசே செய்து தர தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் அருமைச்சகோதரர் மா.பா.பாண்டியராஜன் அவர்கள் துணைநிற்க வேண்டும் எனவும், தமிழக அரசே இதற்கு முழுப் பொருட்பேற்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்