கணவனை தேடும் போராட்டத்தால், பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறி

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்வைக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு கிழக்கிலுள்ள கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மருதங்கேணி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி, அவர்களின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

போரின் பின்னரான உளவியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் 200 நாட்களையும் கடந்து பயணிக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட கிளிநொச்சி உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இன்று 232 ஆவது நாளை எட்டியிருக்கின்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்மார்கள் உயிரிழந்த சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியிருந்த நிலையில்,அவர்கள் நம்பிக்கையை கைவிடாது தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா ஏ-9 வீதி தபால் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டமும் 200 நாட்களைக் கடந்து பயணிக்கின்றது.

230 ஆவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்துவரும் வவுனியா மாவட்ட உறவுகள், தமது பிரச்சினைக்கு இதுவரை தீர்வு வழங்கப்படாமை குறித்து விமர்சனத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 216 ஆவது நாளை எட்டியுள்ளது.

தமது பிள்ளைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வை முன்வைக்கும் என எதிர்பார்த்த போதிலும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட கணவரை தேடி போராட்டத்தை முன்னெடுத்துவருவதால் குடும்பத்தை பாராமரிக்க முடியாமல் போயுள்ளதாக குறிப்பிடும் பெண் ஒருவர், இதனால் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் மருதங்கேணியில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எந்தவித தீர்வுகளோ உறுதிமொழிகளோ இன்றி இன்று 208 ஆவது நாளாக தொடர்க்கின்றது.

இதுமாத்திரமன்றி திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீரப்பு போராட்டமும் உரிய தரப்பினரின் பதில்களின்றி இன்று 221 ஆவது நாளாக தொடர்கின்றமை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு சோர்வையும் சோகத்தையும் ஏற்படுத்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்