அரசியல் கைதிகளின் விடுதலைகோரி யாழ்.பல்கலை மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரம்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.

குறித்த போராட்டம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 22 நாட்களை கடந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தே குறித்த போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளார்கள்.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில், அனைத்து பீடங்களையும் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை, குறித்த அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும், மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் பல்கலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் எமக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை.

நாம் ஜனாதிபதியை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும் அவர் அதற்கு உடன்படவில்லை. இதனால் நாம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

மேலும், வியாழக்கிழமை ஜனாதிபதியுடனான சந்திப்பில் அரசியல் கைதிகள் குறித்து சரியான முடிவு எடுக்கப்படாவிடின் எமது போராட்ட வடிவம் மாற்றமடையும் என்று எச்சரித்துள்ளார்கள்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்