கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் பேசிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தனக்குள் இருக்கும் பேயைக் குறிப்பிட்டாரே தவிர, தன்னைப் பேய் என்று குறிப்பிடவில்லை என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.
‘‘மாவ யக்கா அவுசன்னேப்பா’ என்ற சிங்கள வசனமானது கோபத்தின் வெளிப்பாடாகும். எனக்குள் இருக்கும் பேயை வெளியே கொண்டு வரவேண்டாம் என்பதே அதன் அர்த்தமாகும். யாழ்ப்பாணத்தில் வைத்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் இதைத்தான் சொல்லியிருந்தார். அவர் என்னைக் குறிவைத்துத்தான் பேசினார் என்று நீங்கள் தவறாக எடைபோடவேண்டாம்’’ என்றார் மகிந்த.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேசிய தமிழ் மொழித் தின விழாவில் உரையாற்றிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தன்னைப் பலவீனப்படுத்தினால் பேய்கள் தான் சக்தி பெறும் என்று கூறியிருந்தார்.
2015 அரச தலைவர் தேர்தலுக்கான பரப்புரையின்போது யாழ்ப்பாணத்தில் வைத்து அப்போதைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல் என்று குறிப்பிட்டிருந்தார்.
மைத்திரியின் பேச்சு அதற்கான பதில் என்று அரசியல் அவதானிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பில் மகிந்த ராஜபக்சவிடம் கேட்கப்பட்டது.
‘‘இந்த அரசு கிட்டத்தட்ட பாம்பு செத்த பாம்பாட்டியின் நிலையில்தான் இருக்கிறது. மக்களின் ஆதரவு இவர்களுக்கு இல்லை. அரச தலைவருக்கு வாக்களித்த தமிழ் மக்களே அவரை வெறுக்கின்றனர். அவர் பேய் என்று என்னைச் சொல்லவில்லை. நாங்கள் கோபப்படும்போது நமக்குள் இருக்கும் பேயை வெளியே கொண்டு வரவேண்டாம் என்பதற்காக ‘மாவ யக்கா அவுசன்னேப்பா’ என்று சிங்களத்தில் சொல்வோம். அதனைத்தான் மைத்திரி சொல்லியுள்ளார். அதுதான் உண்மை. நன்றாக யோசித்துப் பாருங்கள். புரியும். இப்போது தேர்தல்களை ஒத்திவைப்பது யார்? பேயின் அவதாரங்களா?’’ – என்றார்.