அனுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தமது உண்ணாவிரதத்தை இன்று தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் நேரில் சென்று அவர்களைச் சந்தித்த நிலையிலேயே உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

வவுனியா நீதிமன்றில் உள்ள தமது வழக்குகளை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று கைதிகள் அனுராதபுரம் நீதிமன்றில் உண்ணாவிரதம் இருந்துவந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக வடக்கு மாகாணத்தில் பல போராட்டங்கள் இடம்பெற்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது கறுப்புக்கொடிப் போராட்டமும் இடம்பெற்றது.

கடந்த ஒக்ரோபர் மாதம் 13 ஆம் திகதி வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலும் நடத்தப்பட்டது. ஆனால், எதற்கும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் களத்தில் இறங்கிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டு ஜனாதிபதியுடன் சந்திப்பும் இடம்பெற்றது. அதிலும் தீர்வு கிடைக்கவில்லை.

இதனால், மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தை முடக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களை அடக்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில், அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக கட்சி பேதம் இன்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பு ஒன்றுக்கு வருமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைத்திருந்தது.

நேற்று (03) இடம்பெற்ற இச்சந்திப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள எவரும் கலந்துகொள்ளவில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, மேற்படிக் கூட்டத்தில் கலந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா தவிர ஏனைய உறுப்பினர்களும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும் அருட்தந்தை ம.சக்திவேல் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களும் இன்று (04) நேரடியாக அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் எனவும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் கோரினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமொழிகளைத் தாங்கள் மதிக்கின்றனர் எனவும் அதனாலேயே போராட்டத்தைக் கைவிடுகின்றனர் எனவும் கூறிய கைதிகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி தமது வழக்குகள் உள்ளன எனவும் அதற்கு முன்னர் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் எனவும்; கூறியுள்ளனர்.

அவ்வாறு தீர்வு கிடைக்காவிட்டால், தாங்கள் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பர் எனவும் தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்