மனித உரிமை மீறல்களை ஊக்குவிக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களுக்கு ஏற்ப அமையாத இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கு ஏற்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

உதாரணமாக அந்தச் சட்டத்தின் கீழ் நீதிபதி ஒருவருக்கு முன்பாக முன்னிலைப்படுத்தப்படாமலேயே ஒருவர் 18 மாதங்கள் தடுத்து வைக்கப்படலாம்.
சாதாரண சட்டத்தின் கீழ் நீதிபதியொருவருக்கு முன்னர் மாத்திரமே ஒருவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற முடியும். அது நீதிமன்றத்தாலும் ஏற்கப்படும்.

ஆனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உதவிப் பொலிஸ் பரிசோதகர் அன்றேல் அவருக்கு மேலுள்ள அதிகாரிகள் எவரும் பெற்றுக்கொள்ளும் நிலையிலேயே அந்த ஒப்புதல் வாக்குமூலமானது நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆகையால் அந்த மாதிரியான ஒரு சட்டம் இருக்கும் நிலையில், அது சித்திரவதைகளைச் செய்வதற்குச் சாதகமான ஒரு சூழ் நிலையை ஏற்படுத்துகின்றது.
ஏனெனில் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே சித்திரவதை செய்யப்படக்கூடும்.

ஆகையால்தான் தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை. ஆகையால் அந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக் குழு திட்டவட்டமாக உறுதிபடக் கூறியுள்ளது.

இதனை வலியுறுத்தி நாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியிருக்கின்றோம். அத்தோடு பகிரங்க அறிக்கைகளையும் விடுத்திருக்கின்றோம்.

எமது இணையத்தளத்தில் சென்று இவற்றை நீங்கள் பார்வை யிட முடியும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே எமது பரிந்துரை. என்றார்.
அண்மையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் தலைவர் ஜுன் லம்பேர்ட் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பாகத் தாம் கடந்தாண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதனால் தாம் மிகுந்த கவலை கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்கள்.

இந்த விடயத்திலே மனித உரிமை ஆணைக்குழு என்ன செய்து கொண்டிருக்கின்றது? இது விடயத்தில் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? என்று தமிழ் பத்திரிகை எழுப்பிய வினாவுக்கு பதில் அளிக்கையிலேயே மனித உரிமை ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்