மாவீரர் நினைவேந்தலை தடுப்பதற்காகவா வாள்வெட்டு? – சீ.வீ.கே. சந்தேகம்

வடக்கில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் குறித்து, வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் இந்த கார்த்திகை மாதத்தில் இவ்வாறு வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கின்றமையானது, மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க விடாது தடுக்கும் நடவடிக்கையா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் அதிகரிக்கும் வாள்வெட்டுச் சம்பங்கள் தொடர்பில், இன்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில் கோண்டாவில் பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களை சுட்டிக்காட்டிய சீ.வீ.கே, இதற்கான மூல காரணங்களை கண்டறிந்து முளையிலேயே கிள்ளியெறிய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

புலிகள்கூட எதற்காக தண்டனை வழங்குகின்றோம் என்று கூறிவிட்டே தண்டனை வழங்கினார்கள். ஆனால், எதற்காக தாக்கப்படுகின்றோம் என்று அறியாமலேயே இவ்வாறு தாக்கப்படுவதும், பரவலாக வாள்வெட்டு இடம்பெறுவதும் எங்கேயோ தவறு உள்ளது என்பதையே சுட்டி நிற்கின்தென குறிப்பிட்டார்.

இந்நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக செயற்படுத்தி, இச்சம்பவங்களுக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

குறிப்பாக இச்சம்பவங்களை புலனாய்வுக்கு உட்படுத்தி தெளிவான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பது அவசியமென சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சில இடங்களில் மோட்டார் சைக்கிள்களில் மூன்று பேர் செல்வதாகவும், சிலர் தலைக்கவசம் இன்றியும் பயணிப்பதாகவும் குறிப்பிட்ட சீ.வீ.கே, இவ்வாறானவர்கள் மீது சட்டம் ஒழுங்கை கடுமையாக செயற்படுத்தினால் அது ஏனையவர்களுக்கு பாடமாக அமையுமென குறிப்பிட்டார். இவ்வாறான விடயங்களில் இளைஞர்களும் சிந்தித்து செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்