மாவீரர் துயிலுமில்ல சிரமதான பணிகளுக்கு பொலிஸார் தடை!

பொதுமக்கள் மற்றும் முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொண்ட துயிலுமில்ல சிரமதானப்பணிகளை பொலிஸார் இடைநிறுத்தியுள்ளனர்.

குச்சவெளி செம்பிமலை பகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் தேசிய மாவீரர் கார்த்திகை 27 நாளினை முன்னிட்டு குறித்த பகுதியில் உள்ள துயிலுமில்லங்களில் இன்றைய தினம் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது குச்சவெளி பொலீஸாரினால் இச்சிரமதானப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, அங்கு இருந்த பொதுமக்கள் முன்னாள் மற்றும் போராளிகள் ஆகியோர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஒன்றியத்தின் தலைவர் க. இன்பராசா கருத்து தெரிவித்த போது,

கடந்த 12ஆம் திகதி சட்டரீதியாக ஆலங்குளம் துயிலுமில்ல சிரமதானப் பணிக்காக அனுமதிகள் பெற்று பிரதேச மக்களின் ஆதரவுடன் செயற்குழு அமைக்கப்பட்டு சிரமதானப் பணியை ஆரம்பித்துள்ளோம்.

எனினும் தற்போது குச்சவெளி செம்பிமலை துயிலுமில்லத்திற்கு தடை உத்தரவு செய்யப்பட்டுள்ளது. இச்செயற்பாடுகள் அனைத்தும் இந்த நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசாங்கத்தின் கீழேயே நடைபெறுகின்றன.

இந்த விடயத்தில் சில இடங்களுக்கு அனுமதியும் சில இடங்களுங்கு அனுமதி மறுப்பும் வழங்கப்படுவதனை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என ஒன்றியத்தின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்