அனுராதபுரம் அரசியல் கைதிகள் விவகாரம்:மீண்டும் காலநீடிப்பு!

அநுராதபுரத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் மேன்முறையீட்டிற்கு மீண்டும் கால அவகாசமொன்றை நீதிமன்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது.அத்துடன் மதியரசன் சுலக்சன் கணேசன் தர்சன் இராசதுரை திருவருள் ஆகியோரின் வழக்கு விசாரணைகள் இனி அநுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெறமாட்டாது எனவும் உறுதியளித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

தமது வழக்குகளை வவுனியா மேல்நீதிமன்றில் தொடரக்கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த மனு கடந்த 15ம் திகதி அன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
அதன்போது சட்டமா அதிபர் சார்பாக சட்டத்தரணி குறித்த மீளாய்வு மனு பற்றிய அமர்வின் போது குறித்த வழக்கிற்கு தமிழ் மக்கள் சாட்சியாக மூன்று சாட்சிகள் காணப்படுகின்றனர். அவர்களில் இரு சாட்சிகள் வவுனியா நீதிமன்றத்திற்கு சாட்சியளிக்க வருவதில் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியதன் காரணமாகவே இவ்வழக்கு அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டது.

பின்னர் அரசியல் கைதிகளின் போராட்டத்தின் போது சாட்சிகளில் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தான் வவுனியா நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்;. எனினும் மற்றைய சாட்சியாளருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் நவம்பர்; 29 ஆம் திகதி வரை மற்றையவருடன் தொடர்பு கொள்வதற்குரிய கால அவகாசத்தினை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதற்கமைய இன்றையதினம் வரை (29ஆம் திகதி) ஏனைய சாட்சியுடன்; தொடர்பு கொள்வதற்குரிய காலஅவகாசத்தினை நீதிமன்றம் வழங்கி வைத்திருந்தது. இன்றைய தினம் தவணை வழங்கப்பட்டு மனு மீளவும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது சமூகமளித்திருந்த சட்டமா அதிபர் சார்பான சட்டத்தரணி முன்னர் குறிப்பிட்ட சாட்சியினை தம்மால் இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் தமக்கு இன்னும் காலஅவகாசம் தேவைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் மதியரசன் சுலக்சன் கணேசன் தர்சன் இராசதுரை திருவருள் ஆகியோரின் வழக்கு விசாரணைகள் இனி அநுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெறமாட்டாது எனவும் உறுதியளித்துள்ளார்.
இவற்றை கவனத்தில் கொண்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அவர்களுக்கான கால அவகாசத்தினை நீதிமன்றம் வழங்கி வைத்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்