மன்னாரில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று (வெள்ளிக்கிழமை) மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில், சட்டத்தரணி நடராஜா காண்டீபன், அந்தோனி சகாயம் ஆகியோர் இன்று மதியம் 12.05 மணியளவில் மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் நகரசபை, மன்னார் பிரதேசசபை, நானாட்டான் பிரதேசசபை, முசலி பிரதேசசபை, மாந்தை மேற்கு பிரதேசசபை, மடு பிரதேசசபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காகவே கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்,

“சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்த கூட்டு அணி சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ஒரு நகரசபை மற்றும் 4 பிரதேசசபை உள்ளடங்கலாக ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல, வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் தாயகத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்