சுமந்திரன் பொதுமன்னிப்புக் கோரவேண்டும்: ஜனநாயக போராளிகள் கட்சி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் இந்த மண்ணிற்காய் ஆயுதமேந்தி மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும் போராளிகளிடமும் பகிரங்க பொதுமன்னிப்பினை கோரவேண்டுமன்பதே எமது நிலைப்பாடாகும் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயகஅரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது. தமிழர்கள் இன்னுமோர் இனத்தின்மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக அல்ல எங்களது தமிழினம் கொல்லப்படுவதில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஆயுதமேந்தினோம்.

அந்தவகையில் உயிரையும் உதிரத்தையும் கொடுத்து தமிழ்த்தேசியத்தை உருவாக்கி அதன் காவலர்களாக கவசங்களாக காத்து நின்றவர்கள் போராளிகள்தான்.

நாம் உருவாக்கிய தேசியத்தில் பதவிகள் தருகின்ற இதமான சூடுகளை அனுபவித்து ஆள்கின்றவர்கள் விடுதலைக்கனவுடன் ஆயுதமேந்தியோரை மலினப்படுத்தும் விதமாக ஆயுததாரிகள் என விளித்து நிற்பது அறத்திற்கு அப்பால்பட்டது.

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நீங்கள் அடிக்கின்ற அரசியல் அலப்பறைகள் எமக்கும் எமது மக்களுக்கும் புதியவையல்ல அவற்றினை நாம் கசப்புணர்வோடே அவதானிக்கின்றோம்.

விரைந்து மாறுகின்ற அரசியல்களம் நிலைத்து நீட்சிபெறுவதற்கு இதுபோன்ற சொல்லாடல்கள் என்றுமே பலம்சேர்க்க போவதில்லை. யாராகினும் நா காக்க வேண்டுகிறோம்.

இவ்வாறான சொல்லாடல்களைப் பயன்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் இந்த மண்ணிற்காய் ஆயுதமேந்தி மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும் போராளிகளிடமும் பகிரங்க பொதுமன்னிப்பினை கோரவேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்” என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்