உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக அடுத்த வருடத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அமைகிறது. கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காகவும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், உள்ளூர் மட்டங்களில் மக்களை வழி நடத்துவதற்கான ஆளுமைகளை தெரிவு செய்வதற்காகவும் இந்த தேர்தல்கள் நடத்தப்படுவதாக கருதப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்த வரையில் முழு பாராளுமன்றமும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அதன் ஊடாக ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கி ஜனாதிபதியினுடைய அதிகாரங்களை குறைத்தல், பல்வேறு குழப்பங்களுக்கும்- கட்சிக் அங்கத்தவர்களிடையே பகைமையை ஏற்படுத்துவதற்கும் வழிகோலியிருந்த தேர்தல் முறைமையை மாற்றுவதற்கும் அத்துடன் புரையோடிப்போயுள்ள நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காணப்பதற்கும் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக ஒரு வழிநடத்தல் குழுவும் அமைக்கப்பட்டு அதன் இடைக்கால அறிக்கையும் வெளியிடப்பட்ட பின்னர் இந்த தேர்தல் நடைபெறுவதால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும், சர்வதேச சமூகமும் இந்த தேர்தலின் மீது கவனத்தை திருப்பியுள்ளன.

தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் அடுத்த பொதுத் தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பது அல்லது யார் ஆட்சியைப் பிடிக்கப் போவது என்பதற்கான முன்னோடியாக அமையவுள்ளது. குறிப்பாக பொது எதிரனியில் களம் இறங்கும் மஹிந்த தரப்பின் செல்வாக்கை வெளிப்படுத்தும் தேர்தலாகவும் அமையப்போகிறது. வடக்கு – கிழக்கைப் பொருத்தவரை இடைக்கால அறிக்கை தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவும், கூட்டமைப்பின் பெயரால் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருசிலர் எடுக்கின்ற முடிவுகள் மக்களுக்கு நன்மை அளித்திருக்கின்றதா அல்லது தமிழ் தலைமை நிதானமாக சிந்தித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒரு கூட்டு முயற்சியுடன் முன்னெடுத்து செல்வதற்கான அவசியத்தை ஏற்படுத்தப் போகின்றதா என்ற வகையிலும் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கையின் கடந்தகால அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள், மனிதவுரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவற்றை துரும்புச் சீட்டாக பயன்படுத்தி சர்வதேசத்தின் துணையுடன் இலங்கை அரசாங்கத்தின் மீது காத்திரமான அழுத்தத்தை செலுத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி இருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலமைப் பொறுப்பை வைத்துக் கொண்டு தமிழரசுக் கட்சி அங்கத்துவ கட்சிகளுடன் எத்தகைய கலந்துரையாடலுமின்றி தன்னிச்சையாக செயற்பட்டு, முடிவுகளை எடுத்து அதனை கூட்டமைப்பின் முடிவுகளாக அறிவித்து வருகின்றது. இத்தகைய முடிவுகள் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் இருந்த அழுத்தத்தை நீர்த்துப் போகச் செய்திருந்ததுடன், சர்வதேச அழுத்தத்தில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றுவதாகவும் அமைந்திருந்தது.

மறுபுறத்தில், யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கவில்லை. மக்களது வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய கடற்பகுதிகள் விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக வீதிகளில் இறங்கி கடந்த பத்து மாதங்களாக போராடி வருகின்றார்கள். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அந்த மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இது மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தலைமை மீதும், தமிழரசுக் கட்சி மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழரசுக் கட்சியின் இணக்க அரசியலுடன் கூடிய இவ்வாறான நடவடிக்கைகளை கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாக விளங்கிய ஈபிஆர்எல்எப் தொடர்ந்தும் கண்டித்து வந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலங்களின் போது மக்களுக்கு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து விலகி வருவதாகவும் அது பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தது. ஐ.நா மனிதவுரிமை பேரவையில் அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்குவதற்கு கூட்டமைப்பு தலைமை ஆதரவு தெரிவித்து எடுத்த முடிவையும் அந்தக் கட்சி எதிர்த்தது. இதன் காரணமாக தொடர்ச்சியாக ஏற்பட்ட கொள்கை சார் முரண் நிலை காரணமாக ஈபிஆர்எல்எப் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்த விடயங்களில் ஏனைய அங்கத்துவ கட்சிகளான ரெலோவும், புளொட்டும் மௌனம் சாதித்து தமிழரசு கட்சியின் செயற்பாடுகளுக்கு துணை போயின. அந்த இரண்டு கட்சிகளும் ஒரு படி மேலே சென்று சம்மந்தனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றோம் என்று பகிரமாகவே அறிவித்திருந்தன. தமது பாராளுமன்ற பதவிகளையும், கதிரைகளையும் தக்க வைப்பதை நோக்காக கொண்டே அவர்களது செயற்பாடுகள் நகர்கின்றது. தாம் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறி விட்டால் மக்களால் நிராகரிக்கப்பட்டு விடுவோம். ஒரு ஆசனத்தை கூட பெற முடியாமல் போய்விடும் என்கின்ற ஒரு அச்ச நிலையிலேயே அந்த இரு கட்சிகளும் கொள்கைகளை கைவிட்டு தமது இருப்புக்காக பேரம் பேசுகின்றன. உள்ளூராட்சித் தேர்தலுக்கான இடப்பங்கீடு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் இவ்விரு பங்காளிக் கட்சிகளும் முரண்பட்டு இரவிரவாக நித்திரை கொள்ளாது கூட்டங்களை நடத்திய போதும் மீண்டும் அந்த தமிழரசுக் கட்சியிடம் சரணாகதி ஆகிவிட்டது. இவ்விரு கட்சிகளின் இத்தகைய அணுகுமுறை தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்துவதற்கு காரணமாக இருக்கின்றது. தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டு என்பது தமிழ் மக்களது கொள்கைக்கான கூட்டாக இல்லாது, அது வெறும் தேர்தலுக்கான கூட்டாகவே இனி தொழிற்படப் போகிறது. இதனை புதிதாக தமிழரசுக் கட்சி கூட்டுக்குள் வரதராஜபெருமாளை உள்வாங்க எடுத்த நடவடிக்கையும், கதிரைக்கான பங்கீடு குறித்து எழுந்துள்ள சண்டைகளும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

தற்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலானது இந்த நிலைப்டபாட்டையொட்டி கொள்கை அடிப்படையில் இரண்டு முகாங்களாகவும், ஆசன பங்கீட்டின் அடிப்படையில் சில கூறுகளாகவும் பிரிந்து இருப்பதை காணமுடிகிறது. ஈபிஆர்எல்எப், தமிழர் விடுதலைக் கூட்டனி, ஈரோஸ், ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஜனநாயக போராளிகளின் ஒரு பிரிவு மற்றும் சில பொது அமைப்புக்கள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டனியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தின் கீழ் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு என்னும் பெயரில் ஒரு அணியாக களம் இறங்கியுள்ளது.

2010 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொள்கை சார் முரண்பாட்டின் காரணமாக வெளியேறி இன்று வரை தீவிர தமிழ் தேசியக் கொள்கையுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னனியாக பயணிக்கின்றது. தோல்வி கண்முன்னே தெரிந்தும் அந்தக் கட்சி கடந்த 8 வருடங்களாக தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்து வந்திருக்கின்றது. இந்த நிலையில் கூட்டமைப்பில் இருந்து தற்போது வெளியேறிய ஈபிஆர்எல்எப் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டு அமைப்பதாக பேசப்பட்டிருந்த நிலையில் அது கைவிடப்பட்டுள்ளது. ஈபிஆர்எல்எப் கட்சியுடன் கொள்கைகளில் முரண்பாடுகள் இல்லாத போதும் சில நடைமுறைப் பிரச்சனைகள் காரணமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் சமவுரிமை இயக்கம் மற்றும் சில பொது அமைப்புக்கள் இணைந்து தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து தமிழ்த் தேசிய பேரவை என்னும் பெயரில் சைக்கிள் சின்னத்தில் களம் இறங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொண்டு தொடர்ச்சியாக தமிழ் தரப்பினால் நிராகரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை புகழ்ந்து பேசுகின்ற தமிழரசுக் கட்சியுடன் இணைந்துள்ள ரெலோ மற்றும் புளொட் ஆகியவை இடைக்கால அறிக்கை தொடர்பில் எஎத்தகைய கருத்துக்களையும் முன்வைக்காமல் தற்போது ஆசன பங்கீட்டில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வீறு கொண்டு எழுந்து தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டு நிற்கின்றனர். கொள்ளை ரீதியில் எழுந்த முரண்பாடுகளின் போது வாய் திறக்காமல் மௌனம் சாதித்தவர்கள். தற்போது தங்களுடைய அரசியல் இலாபம் கருதியும், தங்களது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டு நிற்பதை காண முடிகிறது. தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் உள்ளிட்ட மூன்றுமே தமிழ் மக்கள் மத்தியில் எதைச் சொல்லி வாக்குக் கேட்கப்போகின்றார்கள் என்ற கேள்வி தற்போது எழுகிறது. மக்கள் இந்த மூவரின் மீதும் அதிருப்தியுற்று இருக்கும் நிலையில் இவர்கள் தங்களுக்குள் ஆசன பங்கீடு குறித்து முரண்பட்டுக் கொள்வதை தமிழ் சமூகம் ஒரு நகைச்சுவை காட்சியை இரசிப்பது போலவே ரசித்துக் கொண்டிருக்கின்றது.

கடந்த முறை உள்ளூராட்சித் தேர்தலின் போது தமிழரசுக்கட்சி அதிக ஆசனங்களை தனக்கே ஒதுக்கிக் கொண்டதுடன், பெரும்பாலன சபைகளின் தவிசாளர்களையும் தானே நியமித்துக் கொண்டது. இந்த சபைகள் எதுவுமே காத்திரமான வகையில் செயற்பட்டு உள்ளூராட்சி மன்றங்களின் நோக்கங்களை நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை. அந்த நேரத்தில் அபிவிருத்திகளைப் பற்றி நாம் பின்னர் யோசிக்கலாம், அதற்கு முன்னதாக சர்வதேச சமூகத்திற்கு எமது மக்களின் நிலைப்பாட்டையும், மக்களின் ஐக்கியத்தையும், கட்சிகளின் ஐக்கியத்தையும் காட்ட வேண்டியுள்ளது என்று சொல்லியே மக்களிடம் ஆணை கேட்டார்கள். அன்றைய தேர்தல் கூட்டடங்களில் சம்மந்தன் உரையாற்றுகையில் ‘நாம் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றிய பின்னர் எமக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து நிதி உதவியைப் பெற்று எமது பிரதேசங்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுப்போம்’ என்று கூறியிருந்தார். சபைகள் கைக்கு வந்தன. வாக்குறுதிகளும், அபிவிருத்தி பணிகளும் இந்த தேர்தல் வரையிலும் வெறும் வாய்சொல்லாகவே இருக்கின்றது. புளொட் அந்த நேரத்தில் தான் கூட்டமைப்புக்குள் வந்தது. அதனால் அவர்கள் ஆசனப் பங்கீடு குறித்து எத்தகைய நிபந்தனையும் வைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சித் தேர்தலைப் பொருத்தவரை பல புதிய முகங்கள் ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் களம் இறங்கவுள்ளனர். அவர்களுக்கு அரசியல் அறிவு இருக்கின்றதா, அபிவிருத்தி பற்றிய திட்டமிடல் இருக்கின்றதா என்பதற்கு அப்பால் அந்தக் கிராமத்தில் அவர் செல்வாக்கு மிக்க நபரா என்பதே வேட்பாளர்களின் தெரிவை தீர்மானிக்கப் போகின்றது. அவர்கள் ஊடாகவே போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு கிராமங்களை கட்டியெழுப்ப வேண்டும். அவர்கள் மூலமே தற்போதைய கட்சிகளின் கட்டமைப்புக்களை மேலும் மக்கள் மயப்படுத்த முடியும். தமிழ் மக்கள் முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய பேரவை என்கின்ற மூன்று பெரும் கூட்டுக்கள் தமிழ் தேசிய அரசியலை முன்வைத்து வாக்கு கேட்க வரப்போகின்றார்கள். அவர்களது வேட்பாளர்கள் தான் அந்த கூட்டுக்களின் தொடர் இருப்பை தீர்மானிக் போகின்றார்கள். இது குறித்து நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு மக்களிடமே உள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஐ.நா மனிதவுரிமை ஆணையகத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்ட மேலும் இரண்டு ஆண்டுக்கான கால நீடிப்பின் ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து எழுத்து பூர்வமான அறிக்கையை ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் இந்தக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார். ஆகவே, உள்ளூராட்சித் தேர்தலைக் மையப்படுத்தி இலங்கை அரசாங்கம் நாட்டில் தற்போது ஜனநாயக கட்டமைப்பில் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்று கணக்கு காட்டப் போகிறது. இந்த நேரத்தில் தமிழ் மக்கள் தங்களது அபிலாசைகள் அனைத்தும் இந்த இடைக்கால அறிக்கையின் ஊடாக பிரதிபலிக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும், இது நடைமுறைப்படுத்தப்படும் போது தமக்கு மேலும் பாதுகாப்பாக அமையுமா என்பது குறித்தும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதற்கான ஒரு பரீட்சைக்களமாகவே உள்ளூராட்சி தேர்தல் அமையப்போகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்