தமிழ் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற தர்ம யுத்தத்தை ஆரம்பித்துள்ளோம்: சிவகரன்

தமிழ் தேசிய அரசியலை கொழும்பிலே அடகு வைத்து ஆதாயச் சூதாடிகளாக்கி விட்ட தமிழ் தேசிய அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற நோக்கில் தர்ம யுத்தத்தை தாம் ஆரம்பித்துள்ளதாக சனநாயக தமிழரசு கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் சார்பில் தமிழர் விடுதலைக்கூட்டனியின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக இன்று காலை 11 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பணத்தை செலுத்தி விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசு கட்சியின் செயலாளர் வி. எஸ் .சிவகரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது தர்ம யுத்தம் ஜனநாயக ரீதியான அடிப்படை கோற்பாட்டையும், தமிழ் தேசிய விடுதலையின் நோக்கையும், வடக்கு கிழக்கு இணைந்த தாயக கோற்பாட்டினுடைய அடிப்படை கட்டமைப்பையும் நாங்கள் நிறை வேற்றுகின்ற இந்த புதிய நோக்கோடு மாற்றுக்களத்தை நாங்கள் திறந்து விட்டிருக்கின்றோம்.

2009ஆம் ஆண்டிற்கு பின்னர் மாற்றுக்களம் வெறுமையாக இருந்த சூழ்நிலையில் 2017ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய அரசியலிலே மாற்று களத்தினை திறந்திருக்கின்றோம்.

ஆகவே எங்களோடு கை கோர்க்க எங்களோடு இணைந்து பயணிக்க வருமாறு எல்லோரையும் அழைக்கின்றோம்.

ஏன் எனில் ஒற்றையாட்சிக்கு உற்பட்ட அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளுகின்ற நோக்கோடு இன்றைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குகின்றோம் என கூறுபவர்கள் தமிழ் மக்களை தவறாக வழி நடத்துகின்ற போக்கும், கொழும்பிலே தமிழ் மக்களை அடகு வைத்திருக்கின்ற நிலைப்பாடும் இருக்கின்ற காரணத்தினாலேயே நாங்கள் இந்த தர்ம யுத்தத்தினை தொடங்கியுள்ளோம்.

எமது தர்ம யுத்தம் வெற்றி பெறும். ‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்’ என்பது போல் பிழைத்துப்போன அரசியலை அறத்தை வெற்றி பெற வைக்க வேண்டிய தர்ம யுத்தம் வெற்றி பெறும் என்பதனை கூறிக்கொள்ளுகின்றேன்.” என தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்