‘எதிரியிடம் மண்டியிடாது சயனைட் உட்கொள்ளும் தமிழ்ப் புலிகளின் மரபு எங்களை வெகுவாக ஈர்த்தது’ – மூத்த குர்தி அரசியல் தலைவர்!

எதிரியால் சிறைப்பிடிக்கப்படும் சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது எதிரியிடம் மண்டியிடாது சயனைட் உட்கொண்டு தமது உயிரை மாய்த்துக் கொள்ளும் தமிழ்ப் புலிகளின் மரபு தங்களை வெகுவாக ஈர்த்ததாக தென்குர்திஸ்தானின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், ஈராக் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான மருத்துவக் கலாநிதி மொகமட் கயானி மாவீரர்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

நேற்று 14.12.2017 வியாழக்கிழமை இலண்டனில் தேசத்தின் குரல் நினைவாக நடைபெற்ற குர்தி-தமிழ் நட்புறவு சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ்ப் புலிகள் என்று இதன்பொழுது வாஞ்சையுடன் அழைத்த மருத்துவக் கலாநிதி மொகமட் கயானி, எதிரியிடம் மண்டியிடாது நஞ்சருந்தி தமது உயிரை மாய்த்துக் கொள்ளும் தமிழ்ப் புலிகளின் மரபு பற்றி 1970களிலும், 1980களில் தாங்கள் அறிந்து கொண்டதாகவும், இது தங்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த வீரச்செயல் என்றும் குறிப்பிட்டார்.

ஆயுத எதிர்ப்பியக்கமாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முகிழ்த்த 1970களில், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அபிமானத்திற்கும், மதிப்பிற்குமுரியவராகவும் திகழ்ந்தவரும், மாவீரராகத் தமிழீழத் தேசியத் தலைவரால் பின்னாளில் மதிப்பளிக்கப்பட்டவருமான தியாகி சிவகுமாரன் அவர்கள் 05.06.1974 அன்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 18.05.1984 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளியான வீரவேங்கை பகீன் அவர்கள் சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அம் மரபை தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் அனைவரும் பின்பற்றினார்கள்.

இவ்விடத்தில் கிழக்கு குர்திஸ்தான் (மேற்கு ஈரான்) மனித உரிமைச் செயற்பாட்டாளர் கலாநிதி ஐயர் அற்றா அவர்கள் உரையாற்றுகையில், தான் கலாநிதி பட்டம் பெற்ற அதே இலண்டன் சவுத் பாங்க் (London South Bank University) பல்கலைக் கழகத்தில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கலாநிதிக் கற்கையை மேற்கொண்டதையும், அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றியதையும் அறிந்து கொண்ட பொழுது தான் பெருமிதம் கொண்டதாகத் தெரிவித்தார்.

அத்தோடு என்றோ ஒரு நாள் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தமிழ்ப் புலிகளின் குரல் ஒலிக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

About செய்தியாளர்

மறுமொழி இடவும்