இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஹைட்டி பெண் ஜீவனாம்சம் கோரி வழக்குத் தாக்கல்

இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணிக்கு அனுப்பப்பட்ட படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கருத்தரித்து குழந்தைகளை பிரசவித்த ஹைட்டியைச் சேர்ந்த தாய்மார்கள் ஜீவனாம்சம் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

பத்து பெண்கள் இணைந்து தமது குழந்தைகள் 11 பேர் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையிடமும், சம்பந்தப்பட்ட படையினரிடமும் ஜீவனாம்சம் கோரி வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர்.

இவர்களில் ஒன்பது வயது குழந்தை சார்பில் ஹைட்டியில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் கடமையாற்றிய இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவரிடமும் ஜீவனாம்சம் கோரப்பட்டுள்ளதாக ஹைட்டியின் நீதிக்கும் நியாயத்திற்குமான அமைப்பின் சட்ட நிபுணர் நிக்கோல் பிலிப் தெரிவித்துள்ளார்.

ஹைட்டியில் கடமையாற்றும் ஐ.நா அமைதி காக்கும் படையணியில் சேவையாற்றிய இலங்கை படையினருக்கு எதிராக ஏற்கனவே பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இதன் காரணமாக இலங்கை படையினர் ஹைட்டியில் இருந்தும் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு ஹைட்டிக்கு சென்ற இலங்கை படையணியைச் சேர்ந்த படைச் சிப்பாயிடம் ஜீவனாம்சம் கோரி ஹைட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்திருக்கின்றார்.

குறித்த இலங்கை படைச் சிப்பாய் ஹைட்டியின் லியோகான் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் அமைந்திருந்த ஐ.நா அமைதி காக்கும் படை முகாமில் கடமையாற்றிய போதே ஹைட்டி பெண்னை பலவந்தமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருக்கின்றார்.

இதனால் குறித்த பெண் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு இலங்கை படைச் சிப்பாய் ஹைட்டியைவிட்டு வெளியேறியிருப்பதாக வழக்குத் தொடர்ந்துள்ள பெண் குறிப்பிட்டுள்ளதாக ஹைட்டியின் நீதிக்கும் நியாயத்திற்குமான அமைப்பின் சட்ட நிபுணர் நிக்கோல் பிலிப் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கை எதிர்நோக்கியுள்ள இலங்கை படைச் சிப்பாயின் பெயரும் வழக்கில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் சட்ட நிபுணர் நிக்கோல் பிலிப் தெரிவித்தார்.

குறித்த பெண் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கர்ப்பம் தரிக்கச் செய்த படைச் சிப்பாய் தொடர்பில் பின்னர் வந்த படையணியின் கட்டளைத் தளபதியிடம் முறையிட்டும் அவர்கள் பெண்னை விரட்டியடித்துள்ளதாகவும் ஹைட்டியின் நீதிக்கும் நியாயத்திற்குமான அமைப்பு தெரிவிக்கின்றது.

தவறிழைத்த படைச் சிப்பாய்கள் மற்றும் அவர்கள் அங்கம் வகித்த படையணிகள் மாத்திரமன்றி அவர்களை பணியில் அமர்த்திய ஐ.நா அமைதிகாக்கும் படையினரும் தமது பொறுப்பை நிறைவேற்றாது உதாசீனமாக செயற்படுவதாலேயே தாங்கள் நீதிமன்றத்தை நாட நேரிட்டதாக ஹைட்டி தாய்மார் அமைப்பு அறிவித்துள்ளது.

இதேவேளை மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் நிலைகொண்டுள்ள ஐ.நா அமைதிகாக்கம் படைகளுடன் இணைந்துகொள்வதற்காக இலங்கை படையினர் 184 பேர் இம்மாதம் இறுதியில் மாலிக்கு செல்லவுள்ள நிலையிலேயே ஹைட்டியில் இலங்கை படையினர் உட்பட பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட ஐ.நா அமைதிகாக்கும் படையினருக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்