தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வெறும் சொற்களின் கூட்டே அன்றி, கட்சிகளின் கூட்டல்ல!

உள்ளுராட்சித் தேர்தலை இலக்கு வைத்து இலங்கை தமிழரசு கட்சி பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது. கடந்த 17வருடங்களாக கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் பங்காளிக் கட்சிகளை தயவுதாட்சன்யமின்றி தூக்கிவீசவும் அவர்கள் தயங்கவில்லை.

ஆசனப் பங்கீடு தொடர்பில் இதுவரை இல்லாதளவிற்கு பங்காளிக் கட்சிகள் அவமானப்படுத்தப்பட்டுள்ளன ஆனால் பங்காளிக் கட்சிகளோ தமிழரசு கட்சிச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்காக அனைத்து அவமானத்தையும் சகித்துக்கொள்ளத் தயங்கவில்லை.

கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் பங்காளிக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு கூறினாராம்: அவர்கள் உதைத்துக் கொண்டே இருக்கின்றனர் ஆனால் நாங்களோ அந்தக் கால்களை நக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவ்வாறு கூறியவர் கூட இப்போதும் கூட்டமைப்புக்குள்தான் இருக்கிறார்.

உண்மையில் உள்ளுராட்சித் தேர்தலின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வெறும் சொற்களின் கூட்டே அன்றி, கட்சிகளின் கூட்டல்ல என்பதையே நிரூபித்திருக்கிறது.

இந்த நிலைமைகளை சரியாக மதிப்பிட்டால் சுரேஸ் பிரேமச்சந்திரனின் முடிவு சரியான ஒன்றாகவே நியாயப்படுத்தப்படலாம். சுரேஸ்பிரேமச்சந்திரன் தனது முடிவை அறிவித்த போது, சுரேஸ் அவரசப்படுகின்றார் என்பதான விமர்சனங்களே அதிகம் வெளிவந்தன.

தேர்தல் வெற்றி என்று பார்த்தால் அந்த விமர்சனம் சரியாகக் கூட இருக்கலாம். ஆனால் ஆசனப்பங்கீடு தொடர்பில் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட இழுபறிகளை நோக்கினால், ஒரு கட்சியின் தலைவர் என்னும் வகையில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் முடிவு சரியானதாகவே கணிக்கப்படலாம். ஏனெனில் தமிழரசு கட்சிச் சின்னத்தின் கீழ் சுயமரியாதையை முற்றிலும் இழந்து நிற்பதைக் காட்டிலும் பிறிதொரு தெரிவே உசிதமானது என்னும் முடிவை சரியென்று பலரும் ஏற்றுக்கொள்ளலாம்.

தமிழரசு கட்சி தனித்து போட்டியிடும் முடிவில்தான் இருந்திருக்கிறது. அதற்கு ஏற்பவே தமிழரசு கட்சி அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை தெரிவு செய்திருந்தது. உதாரணமாக சாவகச்சேரி நகரசபைக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமிழரசு கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.

இது தொடர்பில் அப்பகுதி அமைப்பாளருடன் ஏனைய கட்சிகள் தொடர்பு கொண்ட போது, ஏனைய கட்சிகளுக்கான இடம் தொடர்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தனக்கு எவ்வித அறிவுறுத்தலையும் தரவில்லை என்று அவர் பதிலளித்திருக்கின்றார்.

அதாவது ஏற்கனவே மாவைசேனாதி தேர்தல் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்திருக்கிறார் என்பது வெள்ளிடைமலை. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழரசு கட்சியின் தலைமை பல்வேறு நகர்வுகளை மேற்கொள்வதான ஒரு தோற்றத்தையே ஏற்படுத்தியிருந்தது.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தனித்து சென்று புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கலாம் என்னும் நிலையில், அதனை எதிர்கொள்ளும் உபாயம் தொடர்பில் அவர்கள் பல விடயங்களை ஆராய்ந்திருந்தனர்.

இதன் விளைவாவே சிறிதரன் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியை (பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) கூட்டமைப்புக்குள் உள்வாங்குவது தொடர்பில் ஆராயப்பட்டது. இது தொடர்பில் வரதராஜப் பெருமாள் அடங்கிய குழுவினருடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அதனடிப்படையில் உள்ளுராட்சி தேர்தலில் நிறுத்துவதற்கான வேட்பாளர்களை தருமாறும் கோரப்பட்டது.

இதனை நம்பி அக்கட்சியினரும் நாட்களை நகர்த்தியிருந்தனர். ஆனால் இறுதியில் ஏமாற்றப்பட்டனர். தற்போது தமிழர் சமூக ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் முடிவை எடுத்திருக்கிறது. இதே போன்று ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் சில ஆசனங்கள் தரப்படுவதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன எனினும் அதுவும் நிறைவேற்றப்பட்டவில்லை. இறுதியில் விகிதாசார பட்டியலில் சில இடங்கள் தரப்படுவதாக கூறப்பட்டிருக்கின்றது.
கூட்டமைப்புக்குள் இவ்வாறானவர்களை எடுப்பதாக கூறிவிட்டு பின்னர் ஏன் அவர்களை தமிழரசு கட்சி கைவிட்டது?

ஆரம்பத்தில் சுமந்திரன் தரப்பினரிடம் ஒரு கலக்கம் இருந்தது உண்மைதான். அதாவது சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து பேரவையின் தலைமையில் அரசியல் கூட்டணியொன்றை களமிறக்குவது தொடர்பில் திழரசு கட்சி அச்சமடைந்திருந்தது

ஆனால் எதிர்பாராத விதமாக அவ்வாறானதொரு கூட்டிற்கான ஏற்பாடுகள் முளையிலேயே கருகிவிட்டது. இந்த நிலைமைகளை தங்களுக்கு சாதகமாகக் கருதிய தமிழரசு கட்சியினர் தங்களின் உறுதி மொழியிலிருந்து பின்வாங்கினர்.

ஆரம்பத்தில் வாக்குகளை சேகரிக்கும் ஒரு உக்தியாகவே இவர்களை பயன்படுத்தலாம் என்று சுமந்திரன் தரப்பினர் எண்ணியிருந்தனர் ஆனால் அதற்கான தேவையில்லை என்றவுடன் முடிவுகளை கைவிட்டனர். இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு உள்நுழையும் எண்ணத்துடன் இருந்த இரு கட்சினரும் இறுதியில் ஏமாற்றப்பட்டனர். இந்த விடயங்கள் அனைத்தையும் தொகுத்து நோக்கினால் ஒரு உண்மை தெளிவாகும் அதாவது, தமிழரசு கட்சி எந்தவொரு கட்சியையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை கூட்டமைப்பை முழுமையாக கைவசப்படுத்தும் அங்குசம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடம்தான் உண்டு. கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என்னும் வாதம் மேலேழுந்த போதெல்லாம் டெலோ இயக்கம் அதற்கு முட்டுக்கட்டையாகவே இருந்தது

அந்த வகையில் நோக்கினால் தமிழரசு கட்;சியின் இன்றைய ஆதிக்கப் போக்கிற்கு டெலோவும் ஒரு காரணம். டெலோ தனது இயக்கம் பாரம்பரியத்தை பெருமையுடன் எண்ணிப் பார்க்குமாக இருந்தால், இவ்வாறு தமிழரசு கட்சியுடன் தொடர்ந்தும் இழுபட்டுச்செல்லும் நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும். வரலாறு வெற்றிடங்களை விட்டுவபை;பதில்லை என்று ஒரு கூற்றுண்டு.

அதற்கேற்ப இந்தத் தேர்தலின் பின்னர் நிச்சயம் ஒவ்வொரு முன்னாள் விடுதலை இயக்கங்களும் தங்களது இருப்பு தொடர்பில் ஒரு மதிப்பீட்டைச் செய்துகொள்ளும் நிலைமை ஏற்படலாம். இப்போது கூட ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாது இந்தக் கட்சிகள் தயங்குமாக இருந்தால் அதனை பதவி நலன் என்று கொல்வதை விடயும் வேறு வார்த்தையில் கூற முடியாது.
ஒரு முன்னாள் இயக்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் தலைவர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் கூறினார். தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள புத்திஜீவிகள் ஒன்றினைந்து அனைத்து இயக்கங்களையும் ஓரணியில் கொண்டுவரும் ஒரு முயற்சியை அவசரமாகச் செய்ய வேண்டும் ஏனெனில் தமிழரசுக் கட்சியின் இந்த எதேச்சாதிகாரப் போக்கு ஜனநாயக அரசியலுக்கு மிகவும் ஆபத்தானது.

அவர் கூறுவதில் உண்மையுண்டு ஆனால் இதனை யார் முன்னெடுப்பது?

ஆனால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. இந்த உள்ளுராட்சித் தேர்தல் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு ஒரு நல்ல படிப்பினையை வழங்கியிருக்கிறது. வரலாற்றில் முன்னோக்கி பயணிக்க விரும்பும் ஒவ்வொரு அரசியல் சக்திகளும் தங்களுக்கு கிடைக்கும் படிப்பினைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஒரு அரசியல் கடமையாகும். அதனைச் செய்ய மறுப்பவர்கள் அவமானங்களோடு தங்கள் அரசியல் வாழ்வை முடித்துக் கொள்வர்.

ஒரு உள்ளுராட்சித் தேர்தலில் ஆசனங்களை தங்களுக்குள் சமத்துவமாக பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு கூட்டமைப்பு, ஒரு தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுக்கப் போவதாகச் சொல்லுவது நகைச்சுவைக்கு ஒப்பானதாகும்.

அவ்வாறானதொரு நகைச்சுவைதான் தற்போது வடக்கு கிழக்கு சூழலில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த பத்தியாளரின் அவதானத்தில் சுயமரியாதை தொடர்பான ஆகக் குறைந்த சிந்தனையாவது டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளிடம் இருக்குமானால் அவர்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்குச் செல்லநேரிடும்.

அவ்வாறில்லாது போனாலும் கூட, தேர்தல் வெற்றியின் ஊடாக இந்தக் கூட்டமைப்பை தொடர்ந்தும் தக்கவைக்க முடியாது.

உள்ளுராட்சித் தேர்தலின் நிலைமையே இதுவென்றால் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பேசுவதற்கு ஒன்றுமிருக்காது. ஒரு திருப்புமுனைமிக்க காலத்தில் தந்தை செல்வநாயகம் அவர்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார். அப்போதிருந்த பிரதான தமிழ் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார்.

ஒரு வரலாற்றுத் தேவைக்கு முன்னால் கட்சிகள் என்பது எந்தவொரு முக்கியத்துவம் அற்றது ஏனெனில் கட்சிகள் என்பது எவருடைய குடும்பச் சொத்துமல்ல. அது, அந்தக் கட்சி பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் கூட்டமொன்றின் தனித்துவத்தை பேணிப் பாதுகாப்பதற்கான ஒரு ஸ்தாபனம் ஆகும். ஓரு அரசியல் ஸ்தாபனம் இன்றி அரசியலை முன்னெடுக்க முடியாது என்னும் ஸ்டாலினியப் பார்வை முற்றிலும் சரியானது.

அந்த வகையில் நோக்கினால், தமிழ் மக்களின் தேசிய அபிலாஸைகளை பேணிப் பாதுகாப்பதற்கும் அதனை அடுத்த தலைமுறையிடம் ஒப்புவிப்பதற்குமான ஸ்தாபன அரசியல் மிகவும் பலவீனமாக இருக்கிறது.

இந்தப் பலவீனத்தின் இடைவெளியில்தான் தமிழரசு கட்சி பெரிய கட்சியாகவும், தேர்தல் வெற்றிக்கான வாய்ப்பைக் கொண்டிருக்கும் கட்சியாகவும் தெரிகிறது. உண்மையில் இத ஒரு மாயை.

இந்த மாயை, முன்னாள் விடுதலை இயங்கங்கள் அனைவரும் ஒரணியில் திரளும் வரையில் நீளும். எத்தகைய விமர்சனங்களை முன்வைக்க முடிந்தாலும் கூட, இயக்கங்கள் அனைத்திற்கும் ஒரு வலுவான வரலாற்றுப் பங்களிப்பு இருக்கிறது.

ஆனால் அந்த பங்களிப்பை ஒரு ஸ்தாபன வடிவத்துக்குள் கொண்டு செல்வதற்கு அந்த இயக்கங்கள் தயாராக இல்லை.

இந்த அடிப்படையில் நோக்கினால் தமிழரசு கட்சி தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றாலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கூட்டமைப்பாக தொடர்வதற்கான வாய்ப்பு மிகவும் பலவீனமாகவே இருக்கிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்