அதிமுக கட்சி எங்களிடம் தானாக வரும் – தங்க தமிழ்ச்செல்வன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. சுயேட்சையாக நின்ற டிடிவி.தினகரன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் இருந்தே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து டிடிவி ஆதரவாளர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “பெரிய சின்னங்களுக்கு இடையே, ஒரு சுயேட்சை சின்னம் வெற்றி பெறுகிற நிலை வந்ததற்கு காரணம், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய மூன்று தலைவர்களும் உருவாக்கிய தலைவர் டிடிவி தினகரன் என்பதை ஆர்.கே.நகர் மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். வாக்களித்த மக்களுக்கு பாதம் தொட்டு வணங்கி நன்றியை கூறிக் கொள்கிறேன். தேர்தல் பரப்புரையின்போது டிடிவி மக்களிடம் தெளிவான ஒரு கருத்தைச் சொன்னார். அதாவது, இந்தத் தேர்தல் துரோகிகளுக்கு எதிரான தேர்தல், ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல், நான் வெற்றி பெற்றால் துரோகிகளின் ஆட்சி வீட்டுக்கு செல்லும் என்று கூறி வாக்குக் கேட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்” என்று கூறினார்.

மேலும், “இரட்டை இலை சின்னமும், அதிமுக கட்சியும் எங்களிடம் தானாக வந்தே தீரும். மத்திய அரசு, மாநில அரசு, தேர்தல் ஆணையம், காவல்துறை, 6000 ரூபாய் பணம் ஆகிய அனைத்தையும் மீறி சுயேட்சையாக நின்று ஆர்.கே.நகரில், டிடிவி தினகரன் வெற்றி பெறுகிறார் என்றால், மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்” என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

மேலும் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள், இரட்டை இலை சின்னம் இல்லை, அதிமுக கட்சி இல்லை, அவர்களிடம் பணபலம், படைபலம் உள்ளது, நீங்கள் எப்படி ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவீர்கள் என்று கேட்டீர்கள், தற்போது நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் பணம் பட்டுவாடா செய்ய முடியாது, பட்டுவாடா செய்யவும் இல்லை, மக்கள் அதை எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால், அதிமுக 6000 ரூபாய் கொடுத்தது உண்மை. தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக அட்டூழியம் செய்தது உண்மை. நாங்கள் அவர்களை தேர்தல் ஆணையத்திடம் பிடித்துக் கொடுத்தது உண்மை, அதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை. கட்சியை வழி நடத்தக்கூடிய திறமை டிடிவி தினகரனுக்கு மட்டுமே உள்ளது என்பதை ஆர்.கே.நகர் மக்கள் நிரூபித்துவிட்டார்கள்” என்றார்.

“டிடிவியும், நாங்களும் யாரையும் விரோதியாக பார்க்கவில்லை, ஆனால் அவர்கள்தான் எங்களை விரோதியாக பார்த்தனர். நாங்கள் மக்களையும், தொண்டர்களையும் நம்பினோம், அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர் என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது. வருகிற உள்ளாட்சித் தேர்தல், பொதுத் தேர்தலில் இணைந்து செயல்படுத்துவது குறித்தும், எங்களின் அடுத்தகட்ட வியூகத்தையும் பொருத்திருந்து பாருங்கள்” என்று கூறினார்.

“ஸ்லீப்பர் செல்களைச் சேர்த்து மொத்தம் டிடிவி அணியில் நாங்கள் 60 பேர் உள்ளோம், இனிமேல் இந்த எண்ணிக்கை மேலும் கூடும். கூடிய விரைவில் ஸ்லீப்பர் செல்கள் செயல்படுவார்கள். ஸ்லீப்பர் செல்களில் அமைச்சர்களும் உள்ளனர். அதிமுக தலைமையை வழி நடத்தும் தகுதி டிடிவி தினகரனுக்கு மட்டுமே உள்ளது என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்” என்று ஆவேசமாகப் பேசினார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்