பிறக்கும் இவ் ஆங்கிலப்புத்தாண்டு (2018) தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்க்கையை மேம்படுத்தும் என நம்புவோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

நாம் 2018 ஆம் ஆண்டிற்குள் காலடி வைக்கும் தருணத்தில், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை எழுபது ஆண்டுகளுக்கு முன்பே ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் 217A ஆக அறிவித்தது, இது அனைத்து மக்களுக்கும் தேசங்களுக்குமான ஒரு பொதுவான தீர்மானம் என வரையறுத்திருந்தது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனமானது கொடுங்கோல் ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படும் மற்றும் பாரிய அடக்குமுறைகளுக்கும் அட்டூழியங்களுக்கும் உள்ளாக்கப்படும் மக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். எனினும், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் பயன்பாடு மற்றும் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பயன்பாடுகள், இனப்படுகொலைக்கு உள்ளாகும் மக்களைப் பாதுகாப்பதில் இருந்து தோல்வி கண்டுள்ளது என்பதே வரலாற்று உண்மை ஆகும். இதற்கு உதாரணமாக எடுத்துக்கொண்டால் சக்தி வாய்ந்த நாடுகளின் சூழ்ச்சிகளால் ஈழத் தமிழர்களை சர்வதேச மனித உரிமைகள் சட்டமும் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் காப்பாற்றத் தவறிவிட்டன என்றே இடித்துரைக்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் மிகவும் பாரிய இராணுவரீதியான அடக்கு முறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் முகங்கொடுத்துக் கொண்டுள்ளனர். தமிழர்களுடைய பாரம்மரிய தாயகத்தில் ஐந்து பொதுமகனுக்கு ஒர் இராணுவச் சிப்பாய் என்ற வகையில் தமிழர்கள் அடக்கி ஆளப்படுகின்றனர், தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த வளம் நிறைந்த நிலங்கள் மற்றும் அவர்களது சொந்த இல்லங்கள் இன்று வலுக்கட்டாயமாக சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழர்கள் தற்காலிக முகாம்களிலும் குடில்களிலும் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். சிங்கள இராணுவமானது தமிழ்மக்களின் வாழ்வாதாரத்தையும் சுதந்திரத்தையும் சிதைக்கும் வகையில் அவர்களது வாழ்வியல் தொழில்களான மீன்பிடி மற்றும் விவசாயம் போன்ற வாழ்வாதாரங்களைக் கட்டுப்படுத்துவதோடு இத்தொழில்களை இராணுவமே செய்தும் வருகின்றது. இந்தவிதமான அனைத்துக் குற்றச் செயல்களும் தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த ‘’நல்லாட்சி அரசின்’’ அனுசரணையுடனேயே நடைபெறுகின்றது. இன்றுவரை தமிழ்மக்களுக்கான “தீர்வை” முன்வைக்காது இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் தமிழர்களுடைய அடையாளத்தை முற்றிலுமாக அழித்தல், தமிழர்களுடைய காணிகளை அபகரித்தல், சிங்களக் குடியேற்றங்களை மேம்படுத்துதல் மற்றும் பௌத்தமயமாக்கல் போன்ற விடயங்களிலேயே முனைப்புக் காட்டி வருகின்றது இந்த நல்லாட்சி அரசு.

தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிவருகின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள தேசத்துடன் இணக்க அரசியலுக்கு உடன்பட்டு தமிழ்த் தேசியத்தை நிர்மூலமாக்கியதன் மூலம் தமது நம்பகத் தன்மையை இழந்துள்ளனர். இந்த சந்தர்ப்பவாத ஊழல்வாதிகளை “ஒன்றுபடுவோம்” என்ற கோசத்தால் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் முட்டாள்தனம் ஆகும். தமிழர்களுடைய அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் கனிந்து வருகின்றது. அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களது இருப்பை இழக்கும் அபாயம் வெகுதொலைவில் இல்லை. தமிழ்மக்களை ஒடுக்குமுறைகளிலிருந்து பாதுகாக்க இனிவரும் புதிய தலைவர்கள் ஒருங்கிணைந்து சர்வதேசரீதியான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புவோமாக. சர்வதாசமானது தமிழ் மக்கள அவர்களுக்கான நீதியை அவர்களை இனப்படுகொலை செய்யும் அரசாங்கமே வழங்கும் என்ற நடைமுறைச் சாத்தியமற்ற எதிர்பார்ப்பை மாற்றவேண்டும். பிறக்கும் இப்புத்தாண்டு தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தேவையான மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.

‘’தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’’

-அனைதஆதுலக ஈழத்தமிழர் மக்களவை –

About காண்டீபன்

மறுமொழி இடவும்