ரஜனியின் மாயமான்.

மூத்த இந்திய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 31/டிச/2017 ஒருவழியாக முப்பது வருட தொடர்கதையை முடிவுக்கு கொண்டுவந்து அரசியலில் காலெடுத்து வைக்கப்போவதாக தனது ராசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார்.

இந்த திடீர் அறிவிப்பின் பின்னணியில் அவரது தொழில் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய வியாபார தந்திரமும் அவரது சினிமா இருப்புக்கான தற்காப்பு உத்தியும் மண்டிக்கிடப்பது அவரது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துவரும் அனைவருக்கும் வெள்ளிடை மலையாக தெரியும்.

ரஜனிகாந்த் அரசியலில் பிரவேசிக்கப்போவதாக அறிவித்த செய்தியை
தமிழக ஊடகங்கள் மட்டுமன்றி வட இந்திய காட்சி ஊடகங்களும் கிடைப்பிற்கரிய பேரதிசயம் நிகழ்ந்ததுபோல அந்த செய்தியை பிரமாண்டப்படுத்தி திருப்பி திருப்பி ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன.

சிலவருடங்களுக்கு முன் தெலுங்கு சினிமா சுப்பர்ஸ்ரார் சிரஞ்சீவி அரசியலில் குதித்தபோதும் ஊடகங்கள் பறந்தடித்து இப்படியான செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஊட்டின.

“முகம் தெரிந்தவன் அறிவாளி” என்றளவில்த்தான் இந்திய அரசியல், மற்றும் ஆட்சியமைப்பு அதிகார மையங்கள் பயணித்து வருவதையும் மனவேதனையுடனும் வெறுப்புடன் உற்று நோக்கவேண்டியுள்ளது.

புலி வருகுது புலி வருகுது என்பதுபோல அரசியலுக்கு வருவேன், எப்போ வருவேன் இப்போ வருவேன் என்பதுபோல ரஜனிகாந்த் அவர்கள் தனது 68 வயதுவரை தந்தரமாக தனது உச்ச நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்துக்கொண்டதே இந்திய அளவில் ஆகப்பெரிய சாமர்த்தியமான அரசியல் என்றுதான் கொள்ளவேண்டும்.

இன்றுகூட அவர் சூழ்நிலைக்கைதியாகி தப்பிக்கமுடியாமல் சில சந்தற்பவாத சதிவலைக்குள்ளும் வியாபார ஊடகங்கள் விரித்த வலையிலும் வீழ்ந்து
சில வாக்குமூலங்களை கொடுக்கவேண்டிய கட்டத்தில் இருப்பதும்,

நடித்து முடிந்து வெளிவர இருக்கும் 0.2, மற்றும் காலா ஆகிய படங்கள் விற்பனை செய்வது, ரசிகர்களிடம் முரண்படாமல் வியாபாரத்தில் வெற்றிகொள்வது போன்றவற்றிற்கு இந்நிலை எடுக்கவேண்டிய கட்டாயம் அவருக்கு தவிர்க்கமுடியாத நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

பழகுவதற்கு ரஜனிகாந்த் இனிமையானவர் பண்பானவர் என்று அவரது நட்பு வட்டத்தால் சமீபகாலமாக சொல்லப்படுகிறது. எந்தவிடயத்திலும் எதிர்மறையை காட்டாதவர், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டக்கூடியவர் என்றெல்லாம் பாராட்டு வாசிப்பவர்களும் உண்டு.

எல்லாம் காரியமாகத்தான் என்று ஒரு பொதுவான புரிதலும் உண்டு.

இன்றுவரை அவர் தன்னை மிக மிக தந்தரமாக தக்கவைத்துக்கொண்டே வந்திருக்கிறார்.

அஜித்தின் ரசிகர்கள் முரண்படக்கூடியவரையிலோ, அல்லது விஜய் ரசிகர்கள் மனம் நோகும்படியோ பொதுவெளியில் அவர் காட்டிக்கொண்டதில்லை முன்னணியில் உள்ள எந்த நடிகராக இருந்தாலும் அவர்களிடத்தே பணிந்து தன்னை தக்கவைத்துக்கொண்டே வந்திருக்கிறார்.

கலைஞர் கருணாநிதியை கோபாலபுரத்துக்கு சென்று பார்த்தாராக இருந்தல் மறுநாள் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்று தைரியலட்சுமி வாழிய என்று ஜெயலலிதாவை குளிர்ச்சி படுத்திவிட்டு மறு வேலை பார்பதே கருமம் என்று வாழ்ந்து தனது 68 வது வயதை வெற்றிகரமாக எட்டியிருக்கிறார்.

அவர் நடித்து வெளிவர இருக்கும் 0.2 படம் ஏப்ரல் வெளிவர இருக்கிறது, 0.2 படத்தை வெளியிடுவதற்கு முன் ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து முடிவடைய இருக்கும் காலா படத்தை வெளியிட இருக்கின்றனர். இந்த இரண்டு படத்துக்கும் ரஜனிக்கான சம்பளமே குறைந்தது நூறு கோடி ரூபாக்கள். கனவுத்தொழிற்சாலையில் உற்பத்தியாகும் சினிமா
சிறு சறுக்கலை சந்தித்தாலே ரஜனியின் சம்பளம் கால்வாசியாக குறையும் அபாயமும் தவிர்க்கமுடியாமல் போகும்.

குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் என்று கொடுக்கக்கூடிய ரஜனி, வயது மற்றும் உடல்நிலை காரணமாக அவர் இன்னும் பத்துவருடங்களுக்கு நடிக்கக்கூடிய வாய்ப்பும் இல்லை. இந்நிலையில்த்தான் இரு படங்களின் வசூலையும் சீர்குலையாமல் அறுவடை செய்ய அவர் அரசியல் இறங்குவதாக ரசிகர்களுக்கு வாக்குமூலம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்.

டிச 26 ம் திகதி தொடங்கி 31 ம் திகதிவரை தனது திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார் குறித்த ஐந்து நாட்களும் தமிழ்நாடு தழுவி ஆறாயிரம் ரசிகர்களை சந்திப்பதாக சொல்லப்பட்டது, குறிப்பிட்டபடி ரசிகர்கள் கூட்டமும் ஓரளவுக்கு இருந்தது. இந்த ரசிகர் கூட்டத்தை வைத்து தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்பதெல்லாம் நடந்துவிடக்கூடிய மாயாஜாலமும் அல்ல.

ரஜனி ஒன்றும் எம்ஜீஆரும் அல்ல, மாறாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அளவில் நூறில் ஒருபங்கு உறுதி, நிர்வாக திறமையுடையவருமல்ல.

இந்த ஒன்றுகூடலுக்கு வந்திருந்த ஆறாயிரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இன்னும் சில ஆயிரம் ரசிகர்களும் ரஜனிக்கு இருப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

விஜய் அஜித் விக்ரம் சூர்யா ஆகியோரின் படங்களை ரசிப்பவர்களும் ரஜனி ரசிகராகவும் இருக்கின்றனர். ரஜனியின் தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் நாடளாவிய வரையில் இன்னும் ஒரு ஐயாயிரம் பேர் இருக்கத்தான் செய்கின்றனர் ஆனால் அவர்கள் அதிகமானோர் படிப்பறிவில்லத்தவர்கள் என்பதுடன் அனைவரும் ஐம்பது அறுபது வயதை தொட்டவர்கள் அவர்கள் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளில் இருப்பவர்களே, அவர்களால் இன்றைய இளைஞர்களை புதிய ஒரு கட்சிக்கு ஒன்று திரட்டவோ கொள்கைரீதியாக ஒன்றுபடுத்தி இணைந்து செயற்படவோ முடியாது என்பதும் யதார்த்தமான நிதர்சனம்.

ரஜனி இன்று வெளியிட்ட அறிவித்தலில் அரசியலில் தான் பின்பற்றப்போவதாக சித்தாந்த ரீதியாக எந்த ஒரு கொள்கை விளக்கங்களையும் வெளிப்படுத்தவில்லை. தன்னிடம் ஒரு இளம் பத்திரிகையாளன் உங்கள் கொள்கை என்ன என்று மைக்கை நீட்டி கேட்டதாகவும் தனக்கு அது அதிர்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தான் தொடங்க இருக்கும் அரசியல் கொள்கையாக நல்ல “ஆன்மீக அரசியல்” இருக்கும் என்று அப்பாவித்தனமாக அவர் குறிப்பிட்டிருந்தார். அப்படி அவர் சொன்னது பாஜக தலைவர்களை திருப்திப்படுத்துவதற்கோ என்ற ஐயமும் பலருக்கு எழுவதுபோல் எனக்கும் ஐயம் உண்டு.

பரபரப்புடன் முன்னெடுக்கப்பட்ட ரஜனியின் அரசியல் பயணம் ஒருவேளை குறிப்பிட்டவாறு அரசியல் கட்சி ஒன்றாக மாறி அங்குரார்ப்பணம் செய்து தேர்தலை சந்திக்க நேர்ந்தாலும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் வல்லமை பெறுமா என்பதும் பெரும் சந்தேகமே. ஒருவேளை தனிக்கட்சி தொடங்காமல் பாஜகவுடன் ரஜனி கூட்டுச்சேருவாராக இருந்தால் வேறு வினையே தேவையில்லாமல் முதல் கட்டத்திலேயே படுதோல்வியை அவர் சந்திக்க நேரும்.

அல்லாமல் ஒருவேளை தனித்து நின்றாலும் பரபரப்புடன் ஒரு மாயையை தோற்றுவித்து கணிசமான வாக்குக்களை பெற்று மெல்ல மெல்ல தோல்வியான முடிவை அவரது அரசியல் முயற்சி கொண்டு செல்லும் என்பதுதான் யதார்த்தமானதென்று கணிப்பிட கூடுதல் வாய்ப்பு இருந்தாலும்,

அரசியற் கட்சி தொடங்கினால் சினிமா கவர்ச்சி காரணமாக தொடக்க காலத்தில் கணிசமான வாக்குக்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் அந்த தாக்கம் அதிமுக திமுக கட்சிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்கும் என்பதும் புறந்தள்ள முடியாது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பல நெருக்கடிகளை சந்தித்து உடைந்து தூள் தூளாகிக்கொண்டிருக்கும் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு ரஜனியின் அரசல் பிரவேச அறிவிப்பானது அச்சம் நிறைந்ததாகவே இருக்கும். சற்று குறைந்த அதே நிலைதான் கருணாநிதியின் தாக்கம் இல்லாத திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

ரஜனிகாந்த் அரசியலுக்கு வந்தாரா வரவில்லையா போட்டியில் இருக்கும் இரு திராவிடக்கட்சிகளும் ரஜனி எதிர்ப்பு அரசிலில் மிக மூர்க்கமாக ஈடுபடக்கூடும் அந்த எதிர்ப்பு ரஜனிக்கு பேராதரவு இருப்பதுபோல ஒரு தோற்றத்தை உண்டுபண்ணலாம்.

அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருப்பதால் இவ்விடயத்தை பேரிதுபடுத்தவேண்டிய தேவை இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

ரஜனிகாந்த் அரசியல் கட்சி ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து கட்சிக்கான பெயரை சூட்டி, அதற்கான கொள்கை கோட்பாடுகளை அறிவித்து இடது, அல்லது வலதுசாரியா என்று திட்டவட்டமாக தெரிவிக்காதவரை அவர் நடிக்கும் படங்கள் நல்லவிலைக்கு போய்க்கொண்டே இருக்கும் அப்பாவி தொண்டன் இலகு காத்த கிளிபோல காலம் கடந்து மாயமான் தொடரும்.

இருந்தும் ரஜனிகாந்த் தனிக்கட்சி ஒன்று தொடங்கமாட்டார் என்பதே இந்த கட்டுரையின் நம்பிக்கை.

ஈழதேசம் செய்திகளுக்காக.
ஊர்க்குருவி.

About இலக்கியன்

மறுமொழி இடவும்