வல்லரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இலங்கை! – மீண்டும் சமரச முயற்சி!

இவ்வாண்டு முதலாம் திகதியுடன் காலாவதியாகும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கான (ஜி.எஸ்.பி) மீள்அங்கீகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 30ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையின்படி நேற்று (திங்கற்கிழமை) முதல் ஜி.எஸ்.பி சலுகை காலாவதியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த அறிவிப்பால் இலங்கைக்கு பாரதூரமான பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாது என பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா கருத்துகளை முன்வைத்திருந்தார்.

எனினும், இலங்கையின் பொருளாதாரத்தில் ஜி.எஸ்.பி சலுகை முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், இதனை இழப்பது இலங்கைக்கு பொருளாதார ரீதியில் பாரிய சரிவை ஏற்படுத்தும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்ததனைத் தொடர்ந்து இலங்கை, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அறிவித்தமைக்கு எதிராக பல நாடுகள் போர்க்கொடி தூக்கிய நிலையில், அமெரிக்காவின் இத்தீர்மானத்தை மீளப் பெறவேண்டுமென கடந்த வாரம் ஐ.நா. பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

குறித்த வாக்கெடுப்பில், அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை உட்பட 128 நாடுகள் வாக்களித்திருந்தன. தமது தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் நாடுகளுக்கான அமெரிக்காவின் சலுகைகள் யாவும் நிறுத்தப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கையையும் மீறி இலங்கை வாக்களித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஜி.எஸ்.பி சலுகைக்கான மீள்அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதுடன், ஐக்கிய அமெரிக்காவானது இலங்கையின் முன்னணி ஏற்றுமதி சந்தையாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த சலுகையினை மீண்டும் பெற்றுக்கொள்ள இராஜதந்திர ரீதியில் இலங்கை அரசு செயற்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்