கோப்பாய் கொள்ளைச் சம்பவம்: சுதர்சிங் விஜயகாந்த் குற்றவாளியென அறிவிப்பு!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில், முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இவர்களை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில், சந்தேகநபர்களுக்கு எதிரான தண்டனை குறித்த தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வழங்கப்படுமென நீதவான் எஸ்.சதிஸ்தரன் அறிவித்துள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி உத்தியோகத்தர் ஒருவரின் வீடொன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெருமளவு நகைகள் கொள்ளையிடப்பட்டன. குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று சில தினங்களுக்கு பின்னர், சம்பந்தப்பட்ட வங்கி உத்தியோகத்தர் பணிபுரியும் வங்கியிலேயே அடகு வைப்பதற்கும் முயற்சித்துள்ளனர். நகைகளை அடையாளம் கண்டுகொண்ட வங்கி உத்தியோகத்தர் வழங்கிய தகவலின் பிரகாரம் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இவர்கள் நால்வர் மீதும் நகைகளை கொள்ளையடித்தமை, கொள்ளையடித்த நகைகளை உடைமையில் வைத்திருந்தமை, அவற்றை அடகு வைக்க முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு கோப்பாய் பொலிஸாரால் யாழ். நீதவான் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் தொடர்ந்த விசாரணைகளின் பின்னர் நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று யாழ். நீதவான் நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகளென அறிவித்தது.

சுதர்சிங் விஜயகாந்தின் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியானது, எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்