சியேரா லியோனில் பாரிய அனர்த்தம்: மீட்பு பணிகளில் சிக்கல்

மேற்கு ஆபிரிக்க நாடான சியேரா லியோனின் தலைநகரான பிரீடௌன் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டவர்களை மீட்பதில், மீட்புப் பணியாளர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக மீட்பு நடவடிக்கையை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதோடு, மேலதிக அம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளன. அத்தோடு, மேலதிக பொலிஸார் மற்றும் ராணுவத்தினரும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கில் 300இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளன. அத்தோடு, ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 205 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தங்களுக்கு உள்ளான பலருக்கு ராணுவத்தினரால் முதலுதவி வழங்கப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடை மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பெரிய வீடுகளே நீரில் முழ்கியுள்ள நிலையில், பனையோலை உள்ளிட்ட பொருட்களால் அமைக்கப்பட்ட பல சிறிய வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சியேரா லியோனில் மண்சரிவு ஏற்படுவது வழமையான ஒன்று என்கின்ற போதிலும், இந்தளவு பாரிய அனர்த்தமாக இருக்குமென எதிர்பார்க்கவில்லையென மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மேலதிக சுகாதார பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் குழுக்களாக பிரிந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடும் மழையிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்